பெரியார் சிலையை அவமதிக்க வற்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இந்து மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (31.1.2022) தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்கள் கொடுக்க பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், திருப்பூர் அம்மாபாளையம் 7-வது தெருவை சேர்ந்த சுதா என்ற பெண் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும் பொதுமக்களும் உடனடியாக அந்த பெண்ணின் உடலில் தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். பிறகு காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்ணுக்கு அறிவுரை வழங்கி, அவரது பிரச்சனையை மனுவாக எழுதி கொடுக்கும்படி கூறியுள்ளனர்.

அதன்படி அப்பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு எழுதிக் கொடுத்துள்ளார். அந்த மனுவில், “எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். 2018 ஆம் ஆண்டு நானும் எனது கணவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்தோம். தற்போது நானும் எனது குழந்தைகளும் எனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம்.

நான் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். அப்போது இந்து மக்கள் முன்னேற்ற கழக மாநில நிர்வாகி பழனிகுமார் எனக்கு அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகினோம். ஆனால் அவர் என்னை திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடும்படி வற்புறுத்தினார்.

மேலும் இந்து மக்கள் முன்னேற்ற கழக மாநில நிர்வாகி பழனிகுமார், எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக திருப்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, முகநூலில் அவதூறு பரப்பி வருகிறார் எனவே பழனிகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை” என்று மனுவில் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.