திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்குகள் மெரினா கடற்கரை அண்ணா சமாதியில் வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு, அங்கும் இங்கும் துரிதமாக நடந்து அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து கொண்டிருந்தார்.

அவரை தொலைக்காட்சி நேரலையில் பார்த்த பலரின் மனதிலும், யார் இந்தப் பெண் என்ற கேள்வி கேட்ட வண்ணம் இருந்தனர்

கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படும் நிகழ்வில், அங்குள்ள பலரின் கவனத்தை ஈர்த்தவர் இவர். எந்த சிக்கல் இல்லமாலும், முறையாக நடந்ததற்கும் பின்னால் இருந்து பணி புரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவிற்கு  பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமுதா கடந்த 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். திமுக, அதிமுக, ஆகிய இரண்டு ஆட்சிகளிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார் இவர் . தற்போது சென்னை உணவு பாதுகாப்பு முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யலாம் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த உடனேயே, இது தொடர்பாக அங்கு நிர்வகிக்கும் பணி அமுதாவிற்கு ஒதுக்கப்பட்டது.

இதுகுறித்து  அவர் சொன்னவை , “ஆக்ஸ்டு 8ஆம் தேதி காலை, பல்வேறு அதிகாரிகளுக்கு பல்வேறு பணிகள் அரசால் ஒதுக்கப்பட்டது. அண்ணா சமாதியில் கருணாநிதியை அடக்கம் செய்யும் இடத்தின் பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டேன்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர்”ஆணை வந்த உடனே நாங்கள் மெரினாவிற்கு விரைந்தோம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் அங்கு சென்று, அவரை புதைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து அதனை இறுதி செய்தோம்.”

பின்பு இயந்திரங்களை கொண்டு வந்து சுத்தம் செய்ய தொடங்கி, ஷாமியானா, விஐபிக்கள் வருகைக்கான ஏற்பாடுகள், போன்ற மற்ற ஏற்பாடுகளையெல்லாம் விரைவாக செய்ததாக கூறுகிறார் அமுதா.

அதன்பின் ராணுவமும் அங்கு விரைந்து வந்து, எந்த இடத்தில் நின்று சல்யூட் செய்ய வேண்டும், எந்த இடத்தில் வாத்தியங்கள் முழங்கப்படும், துப்பாக்கிச் சூட்டிற்கான இடம் என்று அவர்களது ப்ரோட்டோகால் என்ன என்பதையும் முடிவு செய்யத் தொடங்கினார்கள் என்றார்.

அனைத்தையும் படிப்படியாக ஒருங்கிணைத்தோம் என்று குறிப்பிட்ட அமுதா, “11 மணிக்கு எங்களுக்கு தீர்ப்பு தெரிய வந்தவுடன் பணிகளை தொடங்கிவிட்டோம்” என்று கூறுகிறார்.

“வெறும் ஐந்திலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் இதையெல்லாம் செய்தது கடினமாக இல்லை ஆனால் பெரும் சவாலாக இருந்தது” என்று அமுதா கூறினார்.

முன் அனுபவம் இருந்ததால் அனைவருடனும் ஒருங்கிணைந்து இதை சிறப்பாக செய்ய முடிந்ததாக அவர் கூறுகிறார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யும் முன்னான கடைசி சில நிமிடங்கள் மிகவும் உணர்ச்சிகரமாக உணர்ந்ததாக தெரிவிக்கிறார் அமுதா. “அவரது குடும்ப உறுப்பினர்கள் அவருக்காக வருந்தினார்கள். அதே சமயத்தில் நான் தமிழகத்தை சேர்ந்தவள் என்பதால் நான் என் சிறு வயதில் இருந்து அவரை பார்த்து வந்துள்ளேன். ஒரு மாபெரும் மனிதர் இறந்துவிட்டார் என்று நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது” என்று கூறுகிறார் அவர்.

ஒரு மாபெரும் தலைவருக்கு இறுதிப் பணிகள் செய்வதற்கு வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறுகிறார்.

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் உடல் அடக்கம் செய்வதற்கான பணிகளை செய்ததும் அமுதாவே.

திமுக தலைவர் கருணாநிதிக்கு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் இப்பணியை செய்து முடித்திருக்கிறார் அமுதா என்று சமூக ஊடகங்களில் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.