கேளிக்கை சினிமா வாக்கு & தேர்தல்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்; டி.ராஜேந்தர் 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த முறை நிா்வாகப் பொறுப்பில் இருந்த விஷால் தலைமைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காணரமாக, முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கினர். இதற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார்.

இதனையடுத்து உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்யும் தோ்தல் சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆா் ஜானகி கல்லூரியில் நேற்று (நவம்பர் 22) நடைபெற்றது. இதில் நடப்பு பதவியில் உள்ள நிர்வாகிகள் யாருமே, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தரும், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பி.எல்.தேனப்பன் சுயேச்சையாக போட்டியிட்டார்.

துணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும்,

பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், சுயேச்சையாக ஜே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, ப்ரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் இன்று (நவம்பர் 23) காலையில் 8 மணிக்கு தொடங்கியது.

இதில், தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர் 337 வாக்குகள் பெற்று 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேனப்பன் 87 வாக்குகள் பெற்றார்.

இதேபோல் துணைத் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணியான நலம் காக்கும் அணியை சேர்ந்த தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ் மற்றும் சுயேச்சை வேட்பாளரான கதிரேசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார். மேலும், செயலாளர், செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்; தலைவர் பதவிக்கு 3 பேர் கடும் போட்டி

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.