உச்ச நீதிமன்றம் சட்டம்

டிஆர்பி மோசடி: ரிபப்ளிக் சேனல் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம்

டிஆர்பி மோசடி விவகாரத்தில் மும்பை உயர் நீதிமன்றம் சரியாக செயல்படுவதாக கூறி, ரிபப்ளிக் சேனல் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

மும்பையில் உள்ள ரிபப்ளிக் சேனல், மராத்தியைச் சேர்ந்த பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டுப் பார்வையாளர்களையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதற்காக பிஏஆர்சி நிறுவனம் போலீஸில் புகார் அளித்தது.

இதையடுத்து, விசாரணை நடத்திய மும்பை போலீஸார் 5 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ரிபப்ளிக் சேனல் நிறுவனத்தின் நிர்வாகிகளை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் ரிபப்ளிக் சேனல் நிர்வாகிகளை விசாரிக்க மும்பை போலீஸார் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி ரிபப்ளிக் சேனல் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மும்பை போலீஸார் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வரும்போது, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 (1) ஏ பிரிவுக்கு விரோதமானது அல்ல. அதை மீறுவது எனக் கூற முடியாது. ஆதலால், அந்த மனுவை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.

ரிபப்ளிக் சேனல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கரிஞர் ஹரிஸ் சால்வே, மும்பை போலீஸார் நடத்தும் விசாரணையில் மனநிறைவு இல்லை என்று தெரிவித்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், “கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் மும்பை உயர் நீதிமன்றம் செயல்பட்டுள்ளது. உயர் நீதிமன்றங்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. மேலும் உங்களின் மனுதாரர் அலுவலகம் மும்பையில் தான் இருக்கிறது. மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி முறையிடுங்கள் எனக் கூறி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே தனது மனுவை வாபஸ் பெறுவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் வாசிக்க: உங்களது மகள் இறந்து இருந்தால் இதுபோன்று செய்திருப்பீர்களா.. ஹத்ராஸ் சம்பவத்தில் அலகாபாத் நீதிமன்றம்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.