செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட நாசாவின் பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், பெர்சவரனஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில், நாசா அனுப்பிய பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் 7 மாத பயணங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்த நிலையில், அதன் சுற்றுவட்டபாதையில் சுற்றி வந்தது. பின்னர் விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஜெசிரோ பள்ளத்தில் தரையிறங்கியது.

சாஃப்ட் லேண்டிங் முறையில் பாராசூட்டை பயன்படுத்தி ரோவரை விஞ்ஞானிகள் தரையிறக்கினர். இதன் பின்னர் முதல் புகைப்படத்தை எடுத்து நாசாவுக்கு அனுப்பியது. நாசாவின் விடாமுயற்சியாக அனுப்பப்பட்ட பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் இரண்டு ஆண்டுகள் அங்கு சுற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இதனையடுத்து செயல் நிர்வாகி ஸ்டீவ் ஜுர்சிக் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “செவ்வாய் கிரகத்தில் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. அதற்காக கரோனா தொற்று கால கஷ்டங்களையும் கடந்து விடாமுயற்சியுடன் அற்புதமாக பணியாற்றிய குழுவுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில் முக்கிய பங்காற்றியவர் இந்திய வம்சாவளி அமெரிக்கரான டாக்டர் ஸ்வாதி மோகன். விண் ஊர்தியின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான தலைவராக ஸ்வாதி உள்ளார்.

மார்ஸ் 2020 பெர்சவரன்ஸ் விண் ஊர்தி விண்வெளியில் சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்வது, விண் ஊர்தி தேவையான இடத்துக்கு நகர்த்திக் கொண்டு செல்வது எல்லாம் இவருடைய பொறுப்புகள்தான். குறிப்பாக பெர்சவரன்ஸ் விண் ஊர்தியை செவ்வாயின் மண்டலத்துக்குள் நுழையச் செய்வது தொடங்கி தரையிறக்குவது வரை இவரது பங்கு மிகவும் முக்கியமானது.

இதுகுறித்து ஸ்வாதி மோகன் கூறுகையில், “செவ்வாய் கிரகத்தில் கால்பதித்துள்ள பெர்சவரன்ஸ் ரோவர் அங்கிருந்து பூமியில் செயல்படும் நாசா ஆய்வு குழு மற்றும் செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் Mars Reconnaissance, MAVEN ஆகிய இரண்டு விண்கலங்களை தொடர்பு கொள்ளும்.

இரண்டு விண்கலத்திற்கும் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது உறுதி செய்யும் வகையில் சமிக்ஞை கொடுத்துள்ளது”’ என்றார்.

12கி முதல் 60கி வரை எடை கொண்ட 100 செயற்கைக்கோள்கள்.. மாணவர்கள் அசத்தல்