மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் எடுத்து சென்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக், பொதுவான என் மனசு தங்கம், ஒரு நாள் கூத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் செல்போன் வெளியில் அமைக்கப்பட்டு இருக்கும் செல்போன் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தே பின்னரே கோயிலுக்குள் செல்ல வேண்டும். இதற்கு ரூ. 10 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று இருந்த நடிகை நிவேதா பெத்துராஜ், கோயில் பொற்றாமரைக் குளம் மற்றும் அங்கு இருக்கும் வளையல் கடைகளில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற தடை இருக்கும்போது செல்போன் கொண்டு செல்ல நிவேதா பெத்துராஜூக்கு மட்டும் எவ்வாறு அனுமதி வழங்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உறுதி அளித்துள்ளது.