உயர் நீதிமன்றத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கு மாற்றாக செங்கல்பட்டு அருகில் மாற்று இடம் தருகிறேன் என்று கூறினால் ஏற்றுக் கொள்ள முடியுமா.. என்று சாஸ்த்ரா பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு வழக்கில் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை திருமலைசமுத்திரத்தில் இயங்கி வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர் திறந்தவெளி சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை கட்டி உள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த பல்கலைக்கழக ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த 2018 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான காலக்கெடுவும் 2018 அக்டோபர் 3 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இதனைத்தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் 3 ஆண்டுகள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்தது.

இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து விட்டு, தமிழக அரசின் நில சீர்திருத்த இயக்குனர் ஜெயந்தி ஐஏஎஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்தனர்.

இந்த குழுவின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், கடந்த 25.2.2022 அன்று தஞ்சை கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் தஞ்சை வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திடம் நோட்டீஸ் கொடுத்தனர். மேலும் சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்தில் ஆக்கிரமிப்பு குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

அதில், “ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிங்களை 4 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றப்படாத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்பட்டு அதற்கான செலவுத் தொகை கல்லூரி நிர்வாகத்திடம் பெறப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நோட்டீஸ் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அமர்வு முன்பு நேற்று (2.08.2022) விசாரணைக்கு வந்தது.

அப்போது, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், அரசு புறம்போக்கு நிலத்துக்குப் பதிலாக மாற்று இடம் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் அதற்கு ஆட்சேபம் தெரிவித்து, அந்தப் பல்கலைக்கழகம் கடந்த 35 ஆண்டுகளாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பிவிட்டு, தற்போது மாற்று இடம் வழங்குவதாகக் கூறுவதை ஏற்க முடியாது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென இந்த நீதிமன்றம் தான் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்த பல்கலைக்கழகமும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளது என்றார்.

மேலும், உயர்நீதிமன்றத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கு மாற்றாக செங்கல்பட்டு அருகில் மாற்று இடம் தருகிறேன் என்று கூறினால் ஏற்றுக்கொள்ள முடியுமா.. என்றும் கேள்வி எழுப்பினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மூன்று நாட்களில் அரசு தரப்பு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.