“தெளிவுப்பாதையின் நீசதூரம்” படம் இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், 1997ஆம் ஆண்டு கோவையில் நிகழ்த்தப்பட்ட கலவரம், அதனையொட்டி நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கிரவுடு ஃபண்டிங் அடிப்படையில் உருவாக்கப்பட்டது .
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘தெளிவுப்பாதையின் நீசதூரம்‘ திரைப்படத்துக்கு மத்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் தடை விதித்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பினர். மறுதணிக்கைக் குழுவும் படத்திற்கு தர சான்றிதழ் கொடுக்காமல் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படம் மக்களின் பார்வைக்கு திரையிடப்படுகிறது. இதனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் அரவிந்த், “‘தெளிவுப்பாதையின் நீசதூரம்’ வரும் 9ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ‘எம்.எம்.பிரிவியூ தியேட்டரில் (MM Preview Theatre) தமிழ் ஸ்டூடியோ சார்பில் திரையிடப்படவுள்ளது.
1997ல் நடந்த கோவை கலவரம் நடந்து இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது. கலவரம் என்கிற காரணத்தை செயற்கையாக கட்டமைத்து 18 அப்பாவி இஸ்லாமியர்களை கொன்ற அந்த வெறிபிடித்த நிகழ்வு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று வெற்றுப் பெருமை பேசிவரும் இந்த இந்துத்துவ நாட்டில் தான் அரங்கேற்றப்பட்டது.
இந்த கலவரத்தை மையமாக வைத்து, இந்த கலவரத்தில் புதைந்திருக்கும் உண்மைகளை, ஊடகங்களும் சினிமாக்களும் நம்மிடம் திட்டமிட்டு மறைத்த உண்மைகளை மக்களுக்கு வெளிச்சமிட்டுக்காட்டும் திரைப்படம் ‘தெளிவுப்பாதையின் நீச தூரம்’.
1997 கலவரத்தில் நடந்த சம்பவங்களை திட்டமிட்டு மறைத்தது மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தை மையமாக வைத்து நாங்கள் தயாரித்த இத்திரைப்படத்தையும் தணிக்கை, சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிடும் என்கிற பெயரில் இந்த அரசு முடக்கியது.,
ஆனால் இனியும் முடங்க போவதில்லை நாம்., திரையிடலுக்கு அனைவரையும் வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.