சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவ விடுப்பில் சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனாபாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 7 பேர் எந்த அறிகுறியும் இல்லாமல் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,989 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 42,687 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதியான 1989 பேரில் சென்னையில் மட்டும் 1,484 பேர் உள்ளனர். இதனால் சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்காக மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயந்திக்கு பதில் மருத்துவ கல்வி இயக்குநர் மருத்துவர் நாராயணசாமி தற்போது டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் உட்பட இதுவரை 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, அயனாவரம் ஈஎஸ்ஐ மருத்துவமனை, கே.கே.நகர், அண்ணா நகர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்ற 2000 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: 96 பணியிடங்களில் 5 பேர் மட்டுமே தமிழர்கள்..