மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு கொள்ளயில் ஈடுபட்டனர்.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் கொடநாடு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில், கொடநாடு சம்பவம் தொடர்பாக தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.
 
அந்த ஆவணப்படத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ள சயன் மற்றும் மனோஜ் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தூண்டுதல் பேரிலே கொள்ளைகள் நடத்தப்பட்டதாக கருத்துகளைத் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில், கொடநாடு சம்பவத்தில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி தனக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 6 பேரிடம் ரூ.1.10 கோடி நஷ்டஈடு கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதி கே.கல்யாணசுந்தரத்திடம், மூத்த வழக்குரைஞர் சதீஷ் பராசரன் முறையீடு செய்தார்.
 
அதன்படி கடந்த வாரம் புதன்கிழமையன்று இரவு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ள மேத்யூ சாமுவேல், ஜிபின் பொலியன் குடான், சிஜியா அனில், ஷிவானி, ராதாகிருஷ்ணன், சயன், மனோஜ் ஆகிய 7 பேரும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக ஊடகங்கள் மற்றும் பொது வெளியில் பேசக்கூடாது.
 
மேலும் ஆதாரமற்ற ஆவணங்களை வெளியிட இடைக்காலத் தடை விதித்து விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
 
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கல்யாணசுந்தரம் மேத்யூவுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரம் நீட்டித்ததுடன், வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.