குற்றவாளிகள் மற்றும் தடுப்பு காவலில் எடுக்கப்பட்டவர்களின் உயிரியியல் மாதிரிகளை (Biological Samples) சேகரிக்க வழிவகை செய்யும் குற்றவியல் நடைமுறை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 28.3.2022 அன்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, குற்றவியல் நடைமுறை (அடையாள சேகரிப்பு) மசோதாவை மக்களையில் அறிமுகம் செய்தார்.

1920 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கைதிகள் அடையாள சட்டத்திற்கு மாற்றாக ஒன்றிய அரசால் குற்றவியல் நடைமுறை மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. ‘கைதிகள் அடையாள சட்டம் 1920’-ன் படி சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்களின் கைவிரல் ரேகைகள், கால் விரல் ரேகைகளை மட்டுமே பதிவு செய்து சேகரிக்க முடியும். அதுவும் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் சேகரித்துவிட முடியாது.

இதற்கு மாற்றாக தற்போது நிறைவேற்றி உள்ள குற்றவியல் நடைமுறை அடையாள சட்டத்தின்படி காவல்துறை, சிபிஐ, என்ஐஏ போன்ற விசாரணை நிறுவனங்கள் கைது செய்யப்படுபவர்கள், குற்றவாளிகளின் கைவிரல் மற்றும் கால் விரல் ரேகைகள் மட்டுமின்றி அனைத்து வகையான உயிரியல் மாதிரிகளையும் சேகரிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்குகிறது.

இந்த குற்றவியல் நடைமுறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (4.3.2022) நடைபெற்றது. இந்த மசோதா, குற்றவாளிகள் மற்றும் குற்றம்சாட்டப்படுபவர்களின் கைரேகைகள் மற்றுமின்றி ரத்தம், டி.என்.ஏ, கருவிழி உள்ளிட்ட அனைத்து வகையான உயிரியல் மாதிரிகளையும் சேகரிக்க காவல்துறைக்கு அதிகாரமளிக்கிறது.

இந்த மசோதா மீது நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது ​பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் அல்லது சிறைத் தலைமைக் காவலர் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள விதிகள் குறித்து கவலை தெரிவித்தனர்.

இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்த காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி, இந்த வரைவு மசோதா கடுமையானது மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “குற்றவாளிகளை விட காவல்துறையினரும், புலனாய்வாளர்களும் அதிக திறனுடன் இருப்பதை உறுதிப்படுத்த மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மசோதா சட்டத்தை மதித்து நடக்கும் குடிமக்களின் மனித உரிமைகளை காக்கும் காவலனாக இருக்கும். மேலும் தடயவியல் பயிற்சிக்கான சிறப்புப் பல்கலைக் கழகங்களை அமைக்க இந்த மசோதா வழி வகை செய்யும்.

இந்த மசோதா சட்டமாக்கப்படும் போது சேகரிக்கப்படும் தனி மனித தகவல்கள் பாதுகாக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றமிழைத்தவர்கள் மற்றும் 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்களை தவிர பிறர் தங்களது மாதிரிகளை தருவது கட்டாயமல்ல.

மேலும் இந்த மசோதாவை பயன்படுத்துகையில் தனி மனித உரிமைகளுடன், சமுதாயத்தின் உரிமைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும். இரண்டிற்கும் இடையில் ஒரு சமநிலை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதற்காகவும், குற்றங்களை குறைக்கவுமே இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது. எந்த ஆதாரமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் அச்சப்பட வேண்டாம், இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப வேண்டாம்” என்று அமித்ஷா தெரிவித்தார்.

அமித்ஷாவின் பதிலுக்கு பின்னர் குற்றவியல் நடைமுறை மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குற்றவியல் நடைமுறை மசோதா..

சிறைத்தண்டனை கைதிகள் அடையாள சட்டம் 1920-க்கு மாற்றாக இந்த குற்றவியல் நடைமுறை (அடையாள சேகரிப்பு) மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. 1920 வருட சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் ஆயுள் சிறை தண்டனை வரை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி அல்லது குறைந்தபட்சம் 1 ஆண்டு சிறை தண்டனை பெற்றுக் கொடுக்கும் குற்றங்களில் கைது செய்யப்பட்ட நபர் ஆகியோரிடம் இருந்து கைவிரல் ரேகைகள் மற்றும் கால்தட பதிவுகள் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், தற்போது ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குற்றவியல் நடைமுறை சட்ட மசோதா இந்த வரையறையை விரிவுபடுத்தியுள்ளது. உதாரணமாக, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள்,

தடுப்பு காவல் சட்டங்களின் கீழ் சிறைவைக்கப்பட்டவர்களின் கைவிரல்கள் பதிவுகள், உள்ளங்கை அச்சுப் பதிவுகள், கால்தடப் பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் ( குருதி, வெண்ணிறத் திரவம், தலை முடி மாதிரிகள்) மற்றும் அவற்றின் பகுப்பாய்வு,

கையொப்பங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட நடத்தை பண்புகளை உள்ளடக்கிய தனிப்பட்ட உயிரியல் தரவுகளை சேகரிக்கவும், சேமித்து வைப்பதற்கும், பகுப்பாய்வு செய்ய காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குவதை இந்த சட்ட மசோதா கட்டாயப்படுத்துகிறது.

இவ்வாறு சேகரிப்பட்ட தரவுகளை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் சேமிக்கும். சிறைக்கைதிகளின் பயோமெட்ரிக் தரவுகளை 75 ஆண்டுகள் சேமித்து வைக்கும் உரிமையை இந்த சட்ட மசோதா வழங்கியுள்ளது. இந்த சட்ட மசோதா கீழ், தரவுகளை தர மறுப்பது, எதிர்க்கலகம் செய்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும்.

பெண்கள் அல்லது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது ஏழாண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தவிர, வேறு எந்தக் குற்றத்திலும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இந்த சட்ட முன்மொழிவின் கீழ் அவரது உயிரியல் மாதிரிகளை எடுக்க அனுமதிக்க மறுக்கலாம் (கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள் எடுப்பதை அவரால் மறுக்க முடியாது) என இச்சட்ட மசோதா கூறுகிறது. ஆனால் இந்த முன்மொழிவு குற்றவாளிகளை மட்டும் ஆவணப்படுத்தவில்லை, குற்றங்களின் தன்மையை பகுப்பாய்வு செய்கிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரைத் தமக்கெதிர் சான்றளிப்பவராக இருக்குமாறு கட்டாயப்படுத்துதல் கூடாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவி 20(3) சொல்கிறது. எனவே, 1920 வருட சட்டம் குற்றவாளியின் அடையாளங்களை மட்டுமே ஆவணப்படுத்த அனுமதி வழங்குகிறது.

ஆனால், தற்போதைய குற்றவியல் நடைமுறை மசோதா குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரே தமக்கெதிராக சாட்சியமளிக்க (உயிரியியல் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய அனுமதிப்பதன் மூலம்) நிர்பந்திக்கப்படுகிறார். இது, அரசியல் அமைப்புக்கு எதிரானது. அடிப்படை உரிமைக்கு முரணானது என்று இந்திய அரசியலமைப்பு சொல்கிறது

இத்தகைய முயற்சிகள் நமது சமூக உலகத்தை என்றும் ஆட்கொண்டு நிற்கும், பல்வேறு இனமக்களை குற்றப் பரம்பரைகளாக வகைப்படுத்துமென சமூகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.