முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற IAF MI-17 V5 என்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னுார் அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இதுவரை 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பிபின் ராவத்தின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரி மற்றும் மையம் உள்ளது. இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்பதாக இருந்தது.

இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக, கோவையில் உள்ள ராணுவ மையத்தில் இருந்து IAF MI-17V5 என்ற ராணுவ ஹெலிகாப்டரில் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும்

ராணுவ அதிகாரிகளான பிரிகேடியர் லிட்டர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், நாயக் குர்சேவக் சிங், நாயக் ஜிதேந்தர் குமார், நாயக் விவேக் குமார், நாயக் பி சாய் தேஜா, ஹவால்தார் சத்பால் மற்றும் விமானிகள் என மொத்தம் 14 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், நண்பகல் 12.30 மணியளவில் காட்டேரி நஞ்சப்பா சத்திரம் மலைப்பகுதியில் பிபின் ராவத் உள்ளிட்டோர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. காட்டேரி தேயிலை தோட்டம் பகுதியில் ஹெலிகாப்டரின் பாகம் கிடந்துள்ளது.

இதனையடுத்து, நீலகிரி கலெக்டர் அம்ரித், எஸ்.பி., ஆசிஸ் ராவத், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் மீட்பு பணியினை விரைவுப்படுத்தி வருகின்றனர். 6 ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஹெலிகாப்டர் நீண்ட நேரம் தீப்பற்றி எரிந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்த விபத்தில் இதுவரை 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், 2 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் சிக்கிய முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக உடனடியாக தீவிர விசாரணை மேற்கொள்ளவும் விமானப்படை மற்றும் ராணுவம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களோடு அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் அமைச்சர் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் இருவரும் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், குன்னூர் அருகே முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் 13 பேருடன் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு தற்போது விரைந்து செல்ல இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

MI-17 V5 விமானம் :

MI-17 V5 விமானம் பல்நோக்கு ஹெலிகாப்டர் ஆகும். நடுத்தர அளவிலான தளவாடங்களை கொண்டு செல்லும் ஹெலிகாப்டர். இதில் அதிநவீன ஊடுருவல் உபகரணங்கள் மற்றும் நவீன ஏவியோனிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது துருப்புக்கள் மற்றும் ஆயுதப் போக்குவரத்து, தீயணைப்பு பணிகள், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் எடை சுமார் 7,489 கிலோ மற்றும் அதன் அதிகபட்ச டேக்-ஆஃப் எடை 13,000 கிலோ.

MI-17 8 மீ/வி வேகத்தில் ஏற முடியும். ஹெலிகாப்டரின் அதிகபட்ச வேகம் மற்றும் பயண வேகம் முறையே 250km/h மற்றும் 225km/h ஆகும். இது குறிப்பாக அதிக உயரத்திலும் வெப்பமான காலநிலையிலும் பயணம் செல்வதற்கான மேம்படுத்தப்பட்ட திறன்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.