கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சாமிநாதன் உள்ளிட்ட மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணிபுரிந்து வந்த அங்கமுத்து என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில், பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் முறைகேடுகள் குறித்து எழுதி இருந்தார். இந்நிலையில் பதிவாளரின் மனைவி விஜயலட்சுமி பல்கலைக்கழகத்தில் தேர்வு வெளியீட்டு விவகாரத்தில் பல்வேறு முறைகேடு நடந்து இருப்பதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியீட்டு நடவடிக்கைகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், இதற்காக பல்கலைக்கழக நிதி குழு ஒப்புதல் பெறாமல் சுமார் 3.26 கோடி நிதி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு 10 லட்ச ரூபாய் மட்டுமே நிதி கையாள அதிகாரம் உள்ள நிலையில், விதிமுறையை மீறி ஒவ்வொரு பருவத்திற்கும் தனியார் நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் வரை நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்தவித வசதியும் இல்லாத 3 கல்லூரிகளுக்கு விதிகளை மீறி புதிய பாடப்பிரிவு நடத்த அனுமதி வழங்கியதும், உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத 5 கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக இணைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் லீலா மற்றும் பதிவாளர் அங்கமுத்து ஆகியோர் மீது 3 பிரிவுகளின் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் பதிவாளர் அங்கமுத்து ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு வெளியீட்டு விவகாரம் மற்றும் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது போன்ற சம்பவத்தில் முன்னாள் துணைவேந்தர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய புள்ளிக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.