கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தவறினால், கட்டுமான துறை அடியோடு முடங்கும் நிலை ஏற்படும் என கட்டிட வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். வாழ்க்கையை கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், கட்டுமான தொழிலாளர்களுக்கு தற்போது தான் வேலை தொடங்கியது. அதற்கும் இடியாக, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு அமைந்துள்ளது.

ஏற்கனவே மணல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தங்கத்தை விட அதிக விலை மதிப்புடையதாக மணல் மாறி வருவதாக ஐகோர்ட் வேதனை தெரிவித்து உள்ளது. அரசு குவாரிகளில் ஆன்லைன் மூலம் மணல் புக்கிங் நடக்கிறது. அதையும் இடைத்தரகர்கள் ஆக்ரமித்து விலையை தாறுமாறாக உயர்த்தி விடுகிறார்கள்.

இதை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வரும் நிலையில், தற்போது கட்டுமான பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகின்றன. குறிப்பாக கம்பி, சிமெண்ட் விலை உயர்வு கட்டுமான தொழிலை முடக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது.

கொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவுக்கு முன் ரூ.320 ஆக இருந்த ஒரு மூட்டை சிமென்ட், தற்போது ரூ.425 ஆக உள்ளது. எம் சாண்ட், ஜல்லி விலை உயர்வும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கம்பி விலையோ டன் ரூ.48,000 முதல் ரூ.50,000 என இருந்த நிலையில், தற்போது கம்பி டன் ஒன்றுக்கு ரூ.16,000 உயர்ந்துள்ளது.

கம்பி விலை டன் ரூ.65,000 கடந்து சென்று கொண்டு இருப்பது, கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. செங்கலும் 1 லோடு ரூ.28,000 வரை நெருங்கி உள்ளது. அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையும் 25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு செயற்கையாக உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விலை உயர்வு காரணமாக கட்டுமான பணிகள் அடியோடு முடங்கி உள்ளன. கொரோனாவுக்கு பிறகு இந்த விலை உயர்வு கட்டுமான துறைக்கு பேரிடியாக அமைந்து உள்ளது.

இந்த விலை உயர்வால் தனியார் கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், கட்டுமான பொருட்களின் விலை உயர்வால், அரசு கட்டுமான பணிக்கான மதிப்பீடுகள் 2, 3 மடங்கு அதிகரிக்கும் நிலை உள்ளதாக கான்ட்ராக்டர்கள் கூறி உள்ளனர்.

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தவறினால், கட்டுமான துறை அடியோடு முடங்கும் நிலை ஏற்படும் என கட்டிட வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா காரணமாக வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டதால், தொழிலாளர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

விலை உயர்வு குறித்து கட்டுமான வல்லுநர் சங்கத்தின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் சிறில் கிறிஸ்துராஜ் கூறியதாவது, ஏற்கனவே கொரோனாவுக்கு பின் தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தங்களது சொந்த ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்கள் இன்னும் முழுமையாக திரும்பி வரவில்லை. இந்நிலையில் கட்டுமான பொருள்களின் விலை ஏற்றம் மிகப்பெரிய அதிர்ச்சியை தருகிறது.

ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட கட்டிடங்களை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எஸ்டிமேட் அதிகரிப்பது குறித்து உரிமையாளர்களிடம் கூற முடியாது. கம்பி டன் ரூ.16,000 உயர்ந்துள்ளது. அதேபோல் சிமெண்ட் விலையும் மூட்டை ஒன்றுக்கு ரூ.425 எந்த நிலையில் இருக்கிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் அகில இந்திய சங்கத்தின் சார்பில் அரசுக்கு ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். உடனடியாக இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் கட்டுமான தொழிலில் மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இதுபோன்ற விலை உயர்வின் பின்னணி என்ன என்பது எங்களுக்கே தெரியவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்த அம்மா சிமெண்ட் விலை ரூ.190 ஆக இருந்து ரூ.216 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் அம்மா சிமெண்ட் விலையை உயர்த்தியது தமிழக அரசு