கோலிவுட்டின் பிரபலமான நடிகர் விஜய் சேதுபதியின் வளசரவாக்கம் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை சோதனை என்ற தகவல் பரவியது. அது ரெய்டு இல்லை என்று பின்பு தெரிய வந்தது.

இந்நிலையில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கியிருக்கும் படம் ’96’. அடுத்த வாரம் இப்படம் திரைக்கு வருகிறது. இப்படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி தனது வீட்டில் நடந்தது வருமான வரித்துறை சோதனை அல்ல என விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில், “எனது வீட்டில் நடந்தது வருவான வரித்துறை சோதனை இல்லை. அது சர்வே என அதிகாரிகள் கூறினர். வருமான வரித்துறையில் சர்வே என ஒன்றிருப்பது குறித்து எனக்கே இப்போது தான் தெரியும்.

நான் கடந்த மூன்று வருடங்களாக முன்பணமாக வரி கட்டி வருகிறேன். ஆனால் ரிட்டன் தாக்கல் செய்யவில்லை. தற்போது எனது ஆடிட்டர் ரிட்டன் தாக்கல் செய்ததால், வருமான வரித்துறையினர் வந்து சர்வே செய்தனர். இது தான் நடந்தது. அதற்குள் ஐடி ரெய்டு என தகவல் பரவிவிட்டது. அதுவும் ஒரு பப்ளிசிட்டி தான். பொதுவாக தவறான செய்திகள் தான் வேகமாக பரவும். நாம் காசு கொடுத்தால் கூட அது கிடைக்காது.

தமிழ்நாட்டில் சமீபகாலமாக கண்டதை பேசினால் தான் பப்ளிசிட்டி கிடைக்கும் என ஒரு டிரெண்ட் உருவாகி வருகிறது. பப்ளிக்கா கத்திப் பேசிட்டு, அப்புறம் நான் பேசல என்னோட அட்மின் பேசினாரு என்று சொல்லலாம். இல்ல மிமிக்கிரி பண்ணிட்டாங்கன்னு சொல்லலாம்.

அது மாதிரி என் வீடு போல் செட் போட்டு செக் பண்ணிருக்காங்க. அது என் வீடே இல்ல. என் வீடு போன்ற செட். நான் வெளிப்படையா பேசமாட்டேன். ஏனென்றால் நான் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன்” எனக் கூறினார்.

மேலும், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்கள் புனிதமானவர்கள். அம்மா, மனைவி, தங்கை, மகள் என்று என் வாழ்க்கையில் பாசமுள்ள பெண்கள் உள்ளனர் என விஜய் சேதுபதி குறிப்பிட்டார். சபரிமலை தீர்ப்பை திரையுலக பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.