கடந்த 14ம் தேதி ஜம்மு கஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், துணை ராணுவப்படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40க்கும் அதிகமான இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இருநாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் 2000 பேர் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 12 இடங்களில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்களில் துல்லியமாக தாக்குதல் நடத்தி ஓரு உயிரிழப்பு கூட இல்லாமல் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்.

இந்த தாக்குதலில் புல்வாமா தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பின் தலைமையிடம் உள்பட அனைத்து முகாம்களும் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் எல்லை ஓரம் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் முகாம் மீது காலை 3.30 மணி அளவில் இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி அழித்துள்ளனர். இதில் 200 – 300 வரையிலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிரடி தாக்குதல் குறித்து இந்தியாவின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.