கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தது மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டிவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்காரணமாக தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் வேகம் தற்போது படிபடியாக குறைந்துள்ளது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30-5-2021) நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதல்வரின் ஆய்வு மற்றும் தடுப்பு பணிகள் பெரும் பாராட்டுக்களை பெற்று வந்தாலும், முதல்வரின் இன்றை செயல்பாடு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பிபிஇ கிட் உடை அணிந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

“எப்படி இருக்கீங்க.. மூச்சு விட முடியுதா.. சாப்பாடு நல்லா இருக்கா.. மருத்துவர்கள் எப்படி பார்த்துக்கொள்கிறார்கள், ஏதாவது தேவை இருந்தால் சொல்லுங்கள், சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள்” என்று ஆறுதலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நோயாளிகளிடம் பேசினார். முதல்வரே இப்படி நேரில் வந்து விசாரிப்பதை பார்த்து நோயாளிகளும் நெகிழ்ந்து போனார்கள்.

இந்தியாவிலேயே கொரோனா வார்டிற்கு நேரில் சென்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை எந்த மாநில முதல்வரும் இதுவரை சந்தித்தது இல்லை. மருத்துவமனைகளுக்கு சென்று பார்வையிட்டாலும் கூட, நோயாளிகளின் வார்டுக்கு முதல்வர்கள் யாரும் இதுவரை சென்றது இல்லை.

முதல்வரே நேரடியாக களமிறங்கி பணிகளை ஆய்வு செய்வதும், நோயாளிகளை சந்திப்பதும் மக்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது உணர்வு ரீதியாக நெருக்கத்தை கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதலமைச்சரின் இத்தகைய நடவடிக்கைகளை பாராட்டி பலரும் #WeStandWithStalin என்ற ஹேஸ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி, இலவச கல்வி- முதல்வர் மு.க.ஸ்டாலின்