ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து நடிகர் வில் ஸ்மித் பதவி விலகியுள்ளார்.

நடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது.

‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை நடிகர் வில் ஸ்மித் வென்றார். ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை, நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். அந்த நகைச்சுவையைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை அறைந்தார்.

50 வயதாகும் ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டு வருபவர். இதை 2018இல் ஒரு நிகழ்ச்சியில் அவரே வெளிப்படுத்தியிருந்தார். வில் ஸ்மித் தன் மனைவி ஜடா பிங்கெட்டின் மொட்டை தலை குறித்து கேலியாக பேசியதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அறைந்ததாக வில் ஸ்மித் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதனையடுத்து சிறந்த நடிகருக்கான விருதை வாங்கிய வில் ஸ்மித், மேடையிலே கண்ணீருடன் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். மேலும் இதுகுறித்து தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் எனது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது. நகைச்சுவை என்பது எனது வேலையின் ஒரு பகுதியாக இருந்தாலும், ஜடாவின் உடல்நிலை குறித்த கிண்டலடித்ததால் என்னால் தாங்க முடியவில்லை. அதனால் தான் உணர்ச்சிவசப்பட்டு அடித்துவிட்டேன்.

நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், கிறிஸ். நான் எல்லை மீறி நடந்துகொண்டேன், நான் செய்தது தவறு. நான் வெட்கப்படுகிறேன், எனது செயல்கள் நான் இருக்க விரும்பும் மனிதனைக் குறிக்கவில்லை. அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஆஸ்கர் நிகழ்ச்சியில் கிறிஸ் ராக்கை அறைந்த பின் வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற கோரப்பட்டது என்று ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது. மேலும் வில் ஸ்மித்திற்கு எதிராக ஒழுங்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்கர் அகாடமியின் தலைமைக் குழு உறுப்பினர்களின் சந்திப்பு வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது என்றும் அதன் பிறகு வில் ஸ்மித் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சூழலில் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியிலிருந்து ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி விலகியுள்ளார். Acedemy of motion picture arts and science அமைப்பின் உறுப்பினர் பதவியை வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார்.