ஆப்கானிலிருந்து வெளியேறும் அகதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 16) நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கூறியதாவது,

தலிபான்கள் ஆப்கான் மக்களின் உயிர்களை மதித்து கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களைப் பாதுகாத்து, மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஆப்கானிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அனைத்து நாடுகளும் ஆப்கனுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். ஆப்கனிலிருந்து வரும் அகதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் கவலை அளிக்கின்றன குறிப்பாக ஆப்கன் பெண்கள், சிறுமிகளின் நிலைமை வருத்தமளிக்கிறது. அங்குள்ள பெண்கள் இருண்ட காலம் திரும்பிவிட்டதாக அச்சத்தில் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட நாம் ஒரே குரலில் ஒன்றிணைந்து பேச வேண்டும். தலிபான்கள், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என வேண்டுகிறேன். ஆப்கான் மக்களை நாம் கைவிட்டுவிடக் கூடாது. புறக்கணிக்கவும் கூடாது. அடுத்த வரும் சில நாட்கள் மிக முக்கியமானது.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தல் மேலோங்கியுள்ள சூழலில் உலக நாடுகள் ஒன்றிணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை கட்டுக்குள் வைக்க அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும். ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் பாதுகாப்பான கூடாரமாக மாறிவிட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அதற்கு உலக நாடுகளின் ஒற்றுமை அவசியம்” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தெரிவித்துள்ளார்.

[su_image_carousel source=”media: 25744,25743″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

முன்னதாக தலிபான்களின் ஆட்சி அச்சுறுத்தலுக்கு பயந்து, காபூல் விமான நிலையத்தில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அவ்வாறு திரண்ட மக்கள் அனைவருமே ஏதாவது ஒரு விமானத்தில் எப்படியாவது ஒரு வெளிநாட்டுக்குச் சென்றுவிடமாட்டோமா என்ற ஏக்கத்தில் இருந்தனர்.

மீட்புப் பணிக்காக வந்த அமெரிக்க விமானப்படையின் சி17 க்ளோப்மாஸ்டர் விமானத்தில், உயிர்பிழைக்க வேண்டி உடைமைகளை எல்லாம் சொந்த மண்ணில் விட்டுவிட்டு குடும்பம், குழந்தைகளுடன் ஒரே விமானத்தில் ஆப்கானைச் சேர்ந்த 640 பேர் நெருக்கத்தில் அமர்ந்து பயணித்த புகைப்படம் வெளியாகி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.

போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் மக்கள் மனநிலை என்னவென்பதை இந்தப் புகைப்படம் ஆவணப் படுத்தியிருக்கிறது. 640 பேரை ஏற்றிக்கொண்டு பறந்த அமெரிக்க விமானம் கத்தார் நாட்டிற்குச் சென்றது. அங்கே ஆப்கன் மக்கள் 640 பேரும் இறக்கிவிடப்பட்டனர். இனி அவர்கள் புதிதாக ஓர் வாழ்விடத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.

காபூல் விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம், விமானத்தில் ஃபுட்போர்டு அடித்தாவது தப்பிக்க முயன்ற மக்களின் பதற்றம், துப்பாக்கிச் சூடு, உயிர்ப்பலி ஆகியன மட்டும் தான் சர்வதேச கவன ஈர்ப்பு செய்தியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டைவிட்டு வெளியேறினார் அதிபர் அஷ்ரப் கானி; ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள்