தமிழ்நாடு அரசின் உத்தரவைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மூடப்பட்டு, இதில் பணியாற்றி வந்த பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் மாசு காரணமாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உச்சத்திலிருந்தபோது கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்பட்டது.

இதனால் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க மூன்று மாத காலத்திற்கு (ஜூலை 31 வரை) அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்.

மேலும் ஆக்சிஜன் தேவையைப் பொறுத்து, நீட்டிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்ததன் பேரில், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலையை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அளித்த 3 மாத அனுமதி ஜூலை 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. இதனையடுத்து கொரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையவில்லை. மேலும் 3-வது அலை தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையும் உள்ளது.

எனவே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் எனக் கோரி, ஸ்டெர்லைட் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு ஜூலை 30 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “தமிழ்நாட்டில் போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது. தற்போது மருத்து தேவைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை” என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மூடப்பட்டது. மேலும் இதில் பணியாற்றி வந்த பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று (ஆகஸ்ட் 1) காலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

https://www.facebook.com/savenra/posts/6775475732478292