அமெரிக்கா உலகம்

அமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பிடன்.. பதவியேற்பு விழாவை புறக்கணித்த டிரம்ப்

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட ஜோ பைடன் ‘இது அமெரிக்காவின் நாள். ஜனநாயகத்தின் நாள். வரலாறு மற்றும் நம்பிக்கைக்கான நாள்’ எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர்.

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்கும் விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று (ஜனவரி 20) நடைபெற்றது.

இதில், அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பாரம்பரிய வழக்கப்படி உச்சநீதிமன்ற நீதிபதியான சோனியா சோடோமாயர் பதவிப் பிரமானமும், ரகசியகாப்பு பிரமானமும் செய்துவைத்தார்.

அமெரிக் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் காரணமாக முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப்படை வீரர்கள் களமிறக்கப்பட்டு வாஷிங்டன் டி.சி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் அதிபர் ஜோ பைடன் தனது முதல் உரையில், “இது அமெரிக்காவின் நாள். ஜனநாயகத்தின் நாள். வரலாறு மற்றும் நம்பிக்கைக்கான நாள். பல சோதனைகளை சந்தித்துள்ள அமெரிக்கா, சவால்களில் இருந்து மீண்டுள்ளது.

ஜனநாயம் எவ்வளவு விலைமதிப்பானது என்று நாம் மீண்டும் கற்றுக் கொண்டுள்ளோம். ஜனநாயகம் சற்று பலவீனமானது, ஆனால். இன்று ஜனநாயகம் வென்றிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் (வாஷிங்டன் நாடாளுமன்ற கேப்பிட்டால் வளாகம்) வன்முறை வெடித்தது.

ஆனால், இங்கு நாம் ஒரே நாடாக, கடவுளுக்கு கீழ் ஒன்றிணைந்து இருக்கிறோம். கடந்த இரண்டு தசாப்தங்களாக எப்படி நடந்ததோ அப்படி இன்றும் அமைதியான முறையில் இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

180 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வாக்களிக்கும் உரிமை கேட்டு பேரணி நடத்தியபோது, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவர்களை தடுத்னர். ஆனால், இன்று அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக இங்கு கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார். எதுவும் மாறாது என்று கிடையாது” என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பராக் ஒபாமா, பில் கிளின்டன், மற்றும் ஜார்ஜ் டபுள்யூ புஷ் ஆகியோர் பங்கேற்றார்கள்.

இருப்பினும் வழக்கமாக புதிய அதிபரை, பதவியை இழக்கும் அதிபர் வரவேற்பார். ஆனால், இந்நிகழ்வில் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்ளவில்லை. 1869 ஆம் ஆண்டுக்கு பின் தமக்கு பின் பதவியேற்பவரின் நிகழ்வில் கலந்துகொள்ளாத முதல் அதிபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வரலாற்றில் இருமுறை தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்ட முதல் அதிபர் டிரம்ப்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.