இயக்குனர் அமீர் நடிப்பில் உருவாகியுள்ள “அச்சமில்லை அச்சமில்லை” திரைப்படத்தின் டீசரை அமமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.

நொய்யல் ஆறு மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயிகளின் பிரச்னையை மையப்படுத்தி உருவாகியுள்ள அச்சமில்லை அச்சமில்லை படத்தை முத்து கோபால் இயக்குகிறார்.

அமீர் அரசியல் பிரமுகராக நடித்திருக்கும் இப்படத்தில் சாந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 12-ம் தேதி படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

நடிகர் சங்கப் பிரச்னையை நாட்டு பிரச்னையாக மாத்திய புண்ணியவான்களே என்ற அமீர் பேசும் வசனத்துடன் தொடங்கிய இந்த டீசரில் விவசாய பிரச்னை, டாஸ்மாக், மணல் கொள்ளை என பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டிருந்தன.

தற்போது இரண்டாவது டீசரை அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றுடன் தேர்தல் பரப்புரைகள், பிரச்சாரங்கள் நிறைவடைந்துள்ளது.

தேர்தல் பணிகள் இருக்கும் நிலையிலும், திரைப்படத்தின் டீசரை டிடிவி தினகரன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.