ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்ததால், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. மேலும், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்துள்ளது.

Special Correspondent

இதற்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஏற்கனவே கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கும் காங்கிரஸ், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கடந்த 2014ல் பிரிக்கப்பட்டு தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவினையால் ஆந்திர அரசுக்கு ஏற்படும் வருவாய் இழைப்பை ஈடுகட்ட உதவிகள் அளிப்பதாகவும், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குவதாகவும் ‘ஆந்திரா மறுசீரமைப்பு சட்டம் - 2014’ல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இம்மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும், மத்திய அரசிலும் இடம் பெற்றிருந்த போதிலும் இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை.

இதையடுத்து, சிறந்த அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தீவிரமாக வலியுறுத்த தொடங்கினார்.

இதன் காரணமாக, பாஜ.வுக்கும் தெலுங்கு தேசத்துக்கும் கடந்த சில மாதங்களாக உரசல் அதிகமானது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தெலுங்கு தேசம் கட்சி எம்பி.க்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். இதனால், பாஜ- தெலுங்கு தேசம் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ‘ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க முடியாது’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் கட்டமாக தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தனது 2 அமைச்சர்களை ராஜினாமா செய்யும்படி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

பிரதமர் மோடி நேரடியாக போனில் சமாதானம் பேசியும் சந்திரபாபு நாயுடு தனது முடிவை மாற்றிக் கொள்ள மறுத்தார். கடந்த வாரம் தெலுங்கு தேசம் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். பாஜ தனது போக்கை மாற்றி கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பதாக கூறிய சந்திரபாபு நாயுடு, அதுவரை கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்தார். இருப்பினும், சிறப்பு அந்தஸ்து வழங்கும் விஷயத்தில் மத்திய அரசு உறுதியாக இருந்தது.

இதற்கிடையே, ஆந்திராவில் எதிர்க்கட்சியாக உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சிறப்பு மாநில அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்தார்.

இதற்கு தனது கட்சியும் ஆதரவு அளிக்கும் என சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் அறிவித்தார். தனது கட்சி பொலிட்பீரோ உறுப்பினர்களுடன் நேற்று அவர் கலந்துரையாடல் நடத்தியபோது, ஒய்எஸ்ஆர் காங்கிரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதற்கு பதிலாக நாமே அந்த தீர்மானத்தை கொண்டு வரலாம் என பெரும்பான்மை தலைவர்கள் யோசனை தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில், இக்கட்சியின் மக்களவை தலைவர் தோட்டா நரசிம்மன் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீசை கொடுத்தார்.

அதேபோல், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் அக்கட்சி எம்பி.யான சுப்பா ரெட்டியும் தீர்மான நோட்டீஸ் வழங்கினார். நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ள தகவலை பூஜ்ய நேரத்தின்போது அறிவித்த சபாநாயகர், ‘‘அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை கொண்டு வருவது எனது கடமை. ஆனால், அவையில் இப்போது அதற்கான சூழ்நிலை இல்லை. எனவே, இந்த தீர்மானங்களை இப்போது என்னால் விவாதத்துக்கு கொண்டு வர முடியாது. அவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கிறேன்’’ என்று அறிவித்தார்.

இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால், அன்றைய தினம் இத்தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தி ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவையில் பாஜ.வுக்கு தனிப்பட்ட முறையில் 274 உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளின் ஆதரவு என 315 எம்பி.க்களின் பலம் இருப்பதால், இந்த தீர்மானங்கள் தோற்பது உறுதி என பாஜ மூத்த தலைவரும், நாடாளுமன்ற விவகாரத்து துறை அமைச்சருமான அனந்த குமார் கூறினார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் (டிஆர்எஸ்) நாடாளுமன்ற கட்சித் தலைவர் கேசவராவ் ஐதராபாத்தில் அளித்த பேட்டியில், ‘‘மத்திய அரசு மீதான ஒய்எஸ்ஆர் காங்கிரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக தெலுங்கு தேசம் அறிவித்தது. இன்று, ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கும் பாஜ.வுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சொல்கிறது. இது ஒரு அரசியல் தந்திரம். இந்த தீர்மானம் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத உறுப்பினர்களின் ஆதரவை அவர்களால் திரட்ட முடியுமா? இந்த தீர்மானத்தை கொண்டு வருவதற்கு தகுந்த காரணமே இல்லை. எனவே, இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எங்கள் கட்சி ஆதரிக்காது. இருப்பினும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் கோரிக்கை ஆதரிக்கிறது’’ என்றார்.

பாஜ கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி தெலுங்கு தேசம் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர்களுடன் தொலைபேசி மூலமாக கலந்துரையாடிய போது அவர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: திருடர்கள் கட்சி (ஓய்எஸ்ஆர் காங்கிரஸ்) கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாம் ஆதரித்தால், மக்களுக்கு அது தவறான எண்ணத்தை கொடுத்து விடும். எனவே, நாமே அந்த தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். தீர்மானத்தை கொண்டு வருவதற்கு அக்கட்சிக்கு 5 எம்பி.க்கள் ஆதரவுதான் இருக்கும்.

நமக்கு 51 உறுப்பினர்களின் ஆதரவை எளிதாக பெற்று விடலாம். ஜெகன் மோகன் ரெட்டி, ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் மூலமாக பாஜ நாடகம் நடத்துகிறது. ‘நீங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வாருங்கள். அது தோற்றதும் உங்கள் எம்பி.க்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். உடனே, ஆந்திராவுக்கு நாங்கள் சிறப்பு அந்தஸ்து கொடுத்து விடுகிறோம். அதன் மூலம், அது உங்களால்தான் நடந்தது என்பதை மக்களிடம் எடுத்து கூறி நம்ப வையுங்கள்’ என்று ஜெகன் மோகனிடம் பாஜ கூறியிருக்கிறது. அதுதான், பாஜ.வின் நாடகம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசத்தின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘மத்திய அரசின் பொருளாதார பேரழிவு நடவடிக்கைகள், கொடுமைகள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும். பாஜ கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியதை வரவேற்கிறேன்’’ என்றார்.

மத்தியில் பாஜ அசூர பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தது. அதனால், எதிர்க்கட்சிகளால் அதற்கு எந்த வகையிலும் தொல்லை கொடுக்க முடியவில்லை. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் இப்போதுதான் முதல்முறையாக அது நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்கிறது.

தெலுங்கு தேசம் எம்பி.க்களில் ஒருவரான ரமேஷ் கூறுகையில், ‘‘ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்த எம்பி. விஜயசாய் ரெட்டி, இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்துப் பேச பலமுறை முயற்சி செய்ததை பார்த்தேன். பாஜ.வுக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கும் நெருக்கம் இருப்பதையே இது காட்டுகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. எனவேதான், தனிப்பட்ட முறையில் எங்கள் கட்சி இத்தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்தது’’ என்றார்.

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக இருந்தால், குறைந்தப்பட்சம் 50 எம்பி.க்களின் ஆதரவு வேண்டும். ஆனால், தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரசின் தீர்மானங்களுக்கு காங்கிரஸ் 48, திரிணாமுல் காங்கிரஸ் 34, இந்திய கம்யூனிஸ்ட் 1, மார்க்சிஸ்சிட் கம்யூனிஸ்ட் 9 ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இதோடு, தெலுங்கு தேசத்தின் 16, ஒய்எஸ்ஆர் காங்கிரசின் 9 உறுப்பினர்கள் எண்ணிக்கையையும் சேர்த்தால் 117 எம்பி.க்கள் ஆதரவு உள்ளது.

இதில், முதலில் இதற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக.வின் நிலைபாடு கடைசி நேரத்தில் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, 117 எம்பி.க்கள் ஆதரவும், இதைத் தவிர வேறு சில கட்சிகளின் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளது.

தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரசின் நம்பிக்கையில்லா தீர்மானங்களை ஆதரிப்பதாக காங்கிரஸ் நேற்று அறிவித்தது. அதே நேரம், இதில் ‘உள்குத்து’ இருக்குமோ என்ற சந்தேகமும் அதற்கு உள்ளது. மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘‘இந்த தீர்மானங்களை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால், இதை வைத்து இரு கட்சிகளும் அரசியல் செய்யக் கூடாது’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் ெயச்சூரி அளித்த பேட்டியில், ‘‘ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக கூறி விட்டு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது. அது மன்னிக்க முடியாதது. எனவே, தீர்மானத்தை மார்க்சிஸ்ட் ஆதரிக்கும்’’ என்றார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், ‘‘நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்குதேசம் முடிவு செய்தது, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் ஆதரவுடன் எங்கள் கட்சி நடத்தி வந்த போராட்டத்தின் இறுதியில், இந்த நாடும் தெலுங்கு தேசமும் விழித்துக் கொண்டுள்ளன’’ என்றார்.

தெலுங்கு தேசம் மக்களவை கட்சித் தலைவர் தோட்டா நரசிம்மன் டெல்லியில் அளித்த பேட்டியில், ‘‘தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டு, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தர்மம் ஆகாது. எனவேதான், கூட்டணியில் இருந்து விலகும் முடிவை சந்திரபாபு நாயுடு எடுத்தார். இதைத் தொடர்ந்து, இன்று (நேற்று) காலை 9.30 மணிக்கு மக்களவை சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை கொடுத்தேன்’’ என்றார்.

இதன் மூலம் தென் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆட்சி மட்டும் இல்லை கூட்டணி கூட இல்லாமல் பாஜகவின் நிலை மோசமாகி உள்ள்து .இந்தியா முழுவதும் தங்கள் தான் என்று கூறி வந்த பாஜகவுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும் அதிர்ச்சி வைத்தியம் தான் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் .