செவிலியர்கள் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3வது நாளாக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செவிலியர்கள் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செவிலியர்களின் இரு சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செவிலியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுப்பட்டால் சட்டவிரோதமாக கருதப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனையை ஏழை, நடுத்தர மக்கள்தான் நாடுகிறார்கள், செவிலியர்களுக்கு ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டுவிடுங்கள். செவிலியர்கள் முதலில் போராட்டத்தை கைவிட வேண்டும்.
போராட்டத்தை கைவிடாவிட்டால் செவிலியர்கள் தரப்பு வாதத்தை கேட்க முடியாது. போரட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தால் சம ஊதியம் குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக 28 ஆம் தேதி மாலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நர்சுகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தை கைவிடுவதாக நர்சுகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நர்சுகளுக்கு அனுப்பிய நோட்டீஸ் திரும்ப பெறப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
இந்த நிலையில் 29 ஆம் தேதி கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி 3-வது நாளாக நர்சுகள் போராட்டம் மீண்டும் நீடித்தது.
தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் ஆயிரக்கணக்கான நர்சுகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.கோரிக்கைகள் நிறைவேறும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என நர்சுகள் அறிவித்தனர். இதனால் இன்று மீண்டும் டி.எம்.எஸ். வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
திமுகவின் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ., ஆகியோர் நர்சுகள் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
நேற்று 3-வது நாளாக நர்சுகள் போராட்டம் நீடிக்கப்பட்டு வருவதையொட்டி தமிழக அரசு நர்சுகளுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சுகள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். திரும்பா விட்டால் நர்சுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பும் செவிலியர்களுக்கு எதிராக வரவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து சோகமுடன் கலந்து சென்றனர்.