எரிசக்தி மற்றும் அடிப்படை கட்டமைப்பு; ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் வாழ்க்கை அறிவியல்; நிதி தொழில்நுட்பம் மற்றும், 'டிஜிட்டல்' பொருளாதாரம்; ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய நான்கு முக்கிய துறைகள் குறித்து விவாதிப்பதாக தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில், சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு இன்று நடக்க உள்ளது.
இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளும், அவருடைய ஆலோசகருமான, இவாங்கா தலைமையிலான குழு இன்று அதிகாலை ஐதராபாத் வந்தது.
ஐதராபாத் விமான நிலையத்தில் இன்று அதிகாலை வந்து இறங்கிய இவாங்காவை அமெரிக்கா மற்றும் இந்திய துதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
ஐதராபாத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்க தொழில் முனைவோர் குழுவிற்கு இவாங்கா தலைமை தாங்குகிறார்.
இம்மாநாட்டில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் விருந்தில் இவாங்கா கலந்துகொள்கிறார்.
மிரட்டல்கள் இருப்பதால் இவாங்கா டிரம்ப்புக்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் 3 கி.மீ. சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா சார்மினார், லாட்பஜார் உள்பட முக்கிய இடங்களுக்கு செல்வார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டு தெற்காசியாவில் நடைபெறுவது இதுதான் முதல் முறையாகும். இந்த மாநாட்டு நவம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.