தீவனம் வாங்குவதில் பெரிய அளவில் ஆவின் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்யும் ஆவின் நிறுவனமே தீவனங்களை வழங்கி வருகிறது. ஆவின் நிறுவனத்தால் வழங்கப்படும் தீவனங்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகளை கட்டாயப்படுத்தி தீவனங்களை வாங்க சொல்வதாகவும், பால் உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
50 கிலோ தீவனம் ரூ.960க்கு விற்கப்படுகிறது. ஆவினில் கொடுக்கப்படும் தீவனத்தை விட தனியாரில் கிடைக்க கூடிய தீவனம் தரமுள்ளதாகவே இருக்கிறது என கூறியுள்ள பால் உற்பத்தியாளர்கள், ஆவின் நிறுவன தீவனங்களை மாட்டுக்கு வைத்தால் தினமும் சுமார் 1 லிட்டர் பால் வரை குறைவதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆவின் அதிகாரிகள் பணம் சம்பாதிப்பதற்காகவே ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து மட்டுமே தீவனத்தை வாங்குவதாக கூறிய பால் உற்பத்தியாளர்கள் ., இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னதாக ஆவின் பால் கலப்பட ஊழல் 2014 ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்தே ஊழலின் பின்னணியில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இருப்பதாகவும், இதுகுறித்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் திமுக பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தது.
ஆரம்பத்தில் இதை ஏதோ சாதாரணமான விஷயம் போல காட்டி, மூடிமறைக்க முயன்ற தமிழக அரசு, எதிர்க்கட்சிகள் அளித்த கடுமையான நெருக்கடி காரணமாக குற்றப்புலனாய்வுப் பிரிவு (சி.பி.சி.ஐ.டி) விசாரணைக்கு ஆணையிட்டது. ஆனால், கலப்பட ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு போதிலும்,இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், யார்? என்பதை காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை.
மாறாக இவ்வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் மீது மட்டும் பெயரளவில் வழக்கு நடத்திவிட்டு, இதில் தொடர்புடைய பெரும்புள்ளிகளை காப்பாற்றவே தமிழக காவல்துறை போராடியது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின ஆவின் நிறுவனத்தில் பொது மேலாளர் நிலையில் உள்ள சில அதிகாரிகளுக்கு இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க. நிர்வாகி வைத்தியநாதனுக்கு உழவர்களிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை வாகனம் மூலம் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விதிகளை மீறி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
பால் கலப்பட ஊழல் வெளியான சில நாட்களில் விஷயம் விபரீதம் ஆனதை தொடர்ந்து ஜெயலலிதா அதிமுக அரசில் இருந்து பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தி திடீரென நீக்கப்பட்டார்.
அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பால் கலப்பட ஊழலில் உள்ள தொடர்பு காரணமாக அவர் பதவி நீக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற இயல்பான ஐயம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
அதனடிப்படையில் அவரிடமும், ஆவின் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு விசாரணை நடத்தப்படவில்லை என்பதிலிருந்தே அவர்களைக் காப்பாற்ற காவல்துறை முயற்சி செய்கிறது என்பதை உணர முடியும் என்றே எதிர்கட்சிகள் குற்ற சாட்டினாலும் இந்த வழக்கு எதை ஒரு முன்னேற்றமும் அடையாமல் இழுத்து மூடப்பட்டது என்கிறரர்கள் அரசியல் வல்லுநர்கள்.