மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனக்கூறி பெங்களூருவை சேர்ந்த பெண்ணான மஞ்சுளா என்ற அம்ருதா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Special Correspondent

தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரியும் மனுவில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து, டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதேபோல் ஜெயலலிதாவின் உடலுக்கு வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை. அதனால் வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் எனவும் அம்ருதா கூறியுள்ளார்.

1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி ஜெயலலிதாவின் மகளாக பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தை ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்ததாக மனுவில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த உண்மை இத்தனை வருடங்களாக வெளிப்படுத்தப்படவில்லை. அம்ருதாவின் வளர்ப்பு தாயான ஜெயலலிதாவின் சகோதரி ஷைலஜா 2015-ம் ஆண்டு இறந்து விட்டார்.

வளர்ப்பு தந்தையான சாரதி இந்த ஆண்டு மார்ச் 20-ம் தேதி இறந்து விட்டார். இவ்வாறு அம்ருதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி ஏற்கனவே ஒரு பெண் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி அம்ருதா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது இதனை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதேபோல் ஜெயலலிதா உடலை தோண்டி டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய அம்ருதாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி அம்ருதாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.