வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்த பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவிகள், 4 பேர், பருவத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளதாக தலைமை ஆசிரியர் கண்டித்ததுள்ளார்.
மேலும் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறும் தலைமை ஆசிரியை மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால், தலைமை ஆசிரியர் கூறியது போல் மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்துச் செல்லவில்லை.
இதையடுத்து, வெள்ளியன்று பள்ளிக்கு வந்த மாணவிகள் 4 பேரையும் வகுப்புக்கு வெளியே ஆசிரியர்கள் நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மாணவிகளான தீபா, மணிஷா, சங்கரி, ரேவதி பள்ளிக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தங்களது உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 4 மாணவிகளின் மரணத்தை சந்தேக மரணமாக நெமிலி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, மாணவிகள் தற்கொலைக்கு காரணமான பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளை திட்டிய ஆசிரியையை கைது செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்ததாவது " நமது கல்வி முறை தான் இதற்குக் காரணம். கற்றலும், கற்பித்தலும் மட்டுமே கல்வி அல்ல. வாழக்கையின் சவால்களை எதிர்கொள்வதும் தான் கல்வி ஆகும். ஆனால், நமது கல்வி முறை ஏட்டுக்கல்வியை மட்டுமே வழங்கி வருகிறது. கல்வி என்பது கசப்பானதாக இருக்கக்கூடாது... அனுபவித்து ரசிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். தமிழகத்தின் புதிய பாடத்திட்டமாவது இதை நிறைவேற்ற வேண்டும்.
சுகமான, சுமையற்ற, விளையாட்டுடன் கூடிய, கட்டணமில்லாத, கட்டாயக் கல்வியை வழங்குவதன் மூலம் தான் கல்வியை விருப்பத்திற்குரியதாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாற்ற முடியும். அப்போது தான் மாணவர்கள் தற்கொலை என்ற அவலத்துக்கு முடிவு கட்ட இயலும்" என்று கூறியுள்ளார்.