ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக மருது கணேஷ் போட்டியிடுவார் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் தேர்வு குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக மருது கணேஷ் போட்டியிடுவார் என அறிவித்தார்.
மேலும், திமுக தோழமை கட்சிகளின் ஆதரவோடு திமுக வேட்பாளராக மருது கணேஷ் போட்டியிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். ஆர்.கே.நகரில் திமுக மிகப்பெரிய வெற்றிபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னத்தை திமுக பலமுறை தோற்கடித்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் திமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இந்த அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார். கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் ஸ்டாலின் ஆதரவு கோரியதாகவும் அவரது கோரிக்கையை ஏற்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு விசிக ஆதரவு அளித்துள்ளது என திருமாவளவன் கூறியுள்ளார்.
தினகரன் தானே போட்டியிடுவேன் என்று அறிவித்த நிலையில் ரெட்டை இலை கிடைத்தும் அதிமுக குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன ஆர்.கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி சார்பாக போட்டியிட்ட மதுசூதனன் தான் மீண்டும் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து மதுசூதனனும், நேற்று தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
வடசென்னை பகுதியை சேர்ந்த மதுசூதனனுக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளதாக அதிமுக முன்னணி தலைவர்களும் கருதுகிறார்கள். ஆனால், மதுசூதனனை வேட்பாளராக நிறுத்த வடசென்னை பகுதியில் உள்ள ராயபுரம் தொகுதி எம்எல்ஏவும், மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
ஆரம்ப காலத்தில் இருந்தே மதுசூதனும் ஜெயக்குமாரும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தவர்கள். இந்த நிலையில், மதுசூதனனுக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தால், அமைச்சர் ஜெயக்குமார் செல்வாக்கு சரியும் என்று கூறப்படுகிறது.