அடுத்த ஆண்டு மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வுக்கு அக்டோபர் 31 முதல் நவம்பர் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

Special Correspondent

இத்தேர்வு ஜனவரி 1-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ல் வெளியாக உள்ளன. இதற்கான தேர்வு மையங்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் (National Board of Examinations) நடத்துகிறது. இதன் இணையதளத்தில்தான் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நிலையில் விண்ணப்பம் தொடங்கிய 2-வது நாளே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் தேர்வு மையங்களில் இடமில்லை எனவும், வேறு மாநிலங்களை தேர்வு செய்யும்படியும் அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, தேர்வு எழுதக் காத்திருக்கும் தமிழக எம்பிபிஎஸ் மாணவர்கள், இந்த தேர்வை வேறு மாநிலத்தில் எழுதினால் தேவையற்ற பதற்றம் உருவாகும். சோதனை என்ற பெயரில் தமிழக மாணவர்களுக்கு வட மாநிலங்களில் அதிக தொல்லை தரப்படுகிறது. இதனால் மனதள வில் ஏற்படும் பாதிப்பு தேர்விலும் உண்டாகும். தேர்வுக்கு 4 நாட்கள் முன்புதான் தேர்வு மையம் எது என்பது உறுதி செய்யப்படும். இதன்பிறகு பயண முன்பதிவு செய்து அங்கு போய் சேர்வதே ஒருவித தண்டனை ஆகும். மாணவர்கள் சொந்த மாநிலத்திலேயே தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கடைசி தேதியை ஒத்தி வைத்து, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இதில் புகார் அளிக்க இரு கட்டணமில்லா சேவை எண்கள் (1800 111 800, 1800 111 700) தரப்பட்டுள்ளன. “இவை இரண்டுமே எந்நேரமும் பிஸியாக உள்ளன. சிலசமயம் அதன் மணி அடித்தாலும் பதில் தரப்படுவதில்லை” என மாணவர்கள் கூறுகின்றனர்.

இமெயில் மூலமாகவும் புகார் அளிக்க இணையதளத்தில் விலாசம் தரப்பட்டுள்ளது. இதில் அளிக்கும் புகார்களுக்கு பெரும்பாலும் பதில் வருவதில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக மாணவர்கள் பலரும் சுகாதார செயலாளர் அலுவலகத்தில் புகார் கூறியுள்ளனர். இதற்கு, “இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்” என பதில் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தேசிய தேர்வு வாரிய நிர்வாக இயக்குநர் ரஜினிகாந்த் தவே கூறும்போது, ‘தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களில் 90 சதவீதம் பேருக்கு அங்கேயே இடம் கிடைத்துவிடும். தேர்வுக்காக இந்திய அளவில் 1,20,000 மாணவர்களை அனுமதிக்க முடிவு செய்தோம்.

அடுத்த இரு நாட்களில் தென் மாநிலங்களுக்கு 16 ஆயிரம், மற்ற மாநிலங்களுக்கு 4 ஆயிரம் என இது அதிகரிக்கப்பட்டது. பிறகு நவம்பர் 8-ல் ஒரு அறிவிப்பளித்து சொந்த மாநிலங்களில் தேர்வு மையம் கிடைக்கவில்லை எனில் ‘Others’ எனும் வாய்ப்பை தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கூறி இருந்தோம்.

இவர்களுக்கு கடைசி தேதியான நவம்பர் 27-க்கு பிறகு விண்ணப்ப முகவரி மூலம் தேர்வு மையம் ஒதுக்குவோம். இவர்களில் 80 சதவீதம் பேருக்கு சொந்த மாநிலம் அல்லது அருகிலுள்ள மாநிலங்களில் தேர்வு மையம் கிடைத்துவிடும். தமிழகம், கேரளாவில் இருந்து எங்களுக்கு அதிக புகார்கள் வந்துள்ளன. இவற்றுக்கு நவம்பர் 27-க்கு பிறகு பதில் அளிக்கப்படும்” என்றார்.

‘நீட்’ தேர்வு இணையதள தேர்வாக நடத்தப்படுகிறது. இது கடந்த ஆண்டு தொடர்ந்து ஒரு வாரத்திற்கு 16 முறை நடத்தப்பட்டது. இவற்றில் 1,21,000 மாணவர்கள் தேர்வு எழுதினர். வெவ்வேறு வினாத்தாள் என்பதால் அவை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் புகார்கிளம்பியதால் இம்முறை இத்தேர்வு ஒரே நாளில் ஒரே வினாத்தாளில் நடத்தப்பட உள்ளது என்றார்.