மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான தொழில் முடங்கியுள்ளது. இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் ரூ.52,000 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள் செயல்படாததால் சுமார் 1 லட்சம் மணல் லாரிகள் ஓடவில்லை. இதனால், கட்டுமான தொழில் அடியோடு முடங்கியுள்ளது.
ஓட்டுநர்கள், கிளீனர்கள், கட்டுமான தொழிலாளர், மணல் லாரி உரிமையாளர் என சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை அரசின் பொதுப்பணித்துறையின் மூலம் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 6 மணல் குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மணல் குவாரியிலும் தினமும் 150 லோடு மணல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆளுங்கட்சி ஆதரவுடன் கள்ளத்தனமாக 10,000 லோடு வரை மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இதனால், முறையாக ஆன்லைனில் புக் செய்து காத்திருப்பவர்களுக்கு மணல் கிடைப்பதில்லை. ஆன்லைனில் புக் செய்தால் 2 மாதத்திற்கு ஒரு லோடு மணல் மட்டுமே கிடைத்து வருகிறது.
மணல் தட்டுப்பாடு காரணமாக மணல் விலையும் உயர்ந்து வருகிறது. சென்னையில் லோடு (3 யூனிட்) ரூ.65,000க்கு விற்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் ரூ.80,000, தூத்துக்குடி ரூ.80,000, கோவை ரூ.50,000, நீலகிரி ரூ.50,000 என்று மணல் விற்பனையாகிறது.
தற்போது மழைக்காலமாக இருப்பதால் மணல் விலை ஒரு லட்சம் வரை உயரும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டவர்கள் அரசிடம் நேரிலும், மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான துறையில் மட்டும் கடந்த 6 மாதத்தில் ரூ.50,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மணல் லாரி உரிமையாளருக்கு ரூ.2000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணல் தட்டுப்பாட்டை போக்க 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில் 50 குவாரிகளை முழுமையாக செயல்படுத்தினாலே மணல் தட்டுப்பாடு நீங்கும். தமிழகத்தில் இருந்து கர்நாடகா, கேரளாவுக்கு மணல் கடத்தப்பட்டு வருகிறது. எனவே, வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை முழு ஒத்துழைப்பு அளித்து மணல் கடத்தலை தடுக்க வேண்டும். மணல் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் லாரிகளின் பர்மிட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும்,
கடந்த ஏப்ரல் மாதத்தில் எம்.சாண்ட் மணல் (1 கன அடி) ரூ.30க்கு விற்கப்பட்டது. மணல் தட்டுப்பாட்டால் எம்.சாண்ட் மணல் தற்போது ரூ.90 வரை விற்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் எங்குமே எம்.சாண்ட் மணல் குவாரிகள் இல்லை. அப்படி கிடைக்கும் எம்.சாண்ட் மணல் தரமற்றதாக உள்ளது. இதனால், இந்த மணலை பயன்படுத்தினால் மவுலிவாக்கம் போன்று கட்டிட விபத்து ஏற்படதான் வழிவகுக்கும். எனவே, கேரளாவில் ஐஐடி அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே எம்.சாண்ட் மணல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகத்தில் எம்.சாண்ட் மணலை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆந்திராவில் இருந்து ஒரு நாளைக்கு 400 லாரிகளில் சிலிக்கான் கலப்பட மணல் கடத்தப்பட்டு வருகிறது. இந்த மணலை பயன்படுத்தினால் கட்டிடங்கள் உறுதித்தன்மை பாதிக்கப்படும். எனவே, இந்த மணலுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் முனிரத்தினம் கூறியுள்ளார்.