சென்னை மந்தவெளி பகுதியில் சாலை அமைப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.27 லட்சம் ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கத்தினர் வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். இதனை மேற்கோள் காட்டி கமல் தனது டிவிட்டரில் "அறப்போர் இயக்க சகோதரர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும், என்னை கேள்வியும், ஆதாரமும் கேட்போருக்கு இதுவே போதுமான பதில். மேலும் தொடருமாம் இதுபோன்ற ஆதாரங்கள்" என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக கமல் பற்றிய அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு கமலின் அண்ணன் சாருஹாசன் எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக சாடியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த ஞயிற்றுக்கிழமை, தமிழக அரசை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். அதை கண்டுபிடித்தபின் நிரூபிக்காமல் போவதும் குற்றம்தான். குற்றவாளிகள் நாடாளக்கூடாது" என்று பதிவிட்டிருந்தார்.
இப்பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் "அரசு மீது அபாண்டமான குற்றங்களை சுமத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது. எந்தவித ஆதாரம் இல்லாமல் அரசின் மீது குற்றங்களை சுமத்தி வரும் கமல் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது. நடிகர் கமல் யாரின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று வெளிப்படையாகத் தெரிகிறது" என்று கடுமையாக கண்டித்தார்.
இதற்கு பதிலடியாக சாருஹாசன், "கமல் சொல்வது புரியவில்லை என்று சொல்பவர்கள் பொய்யர்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதற்குப் பதிலாக புரியவில்லை என்கிறார்கள். ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம் குற்றவாளி என்றது புரியவில்லையா?அல்லது பிடிக்கவில்லையா?" என்றும்
மேலும் அமைச்சர் ஜெயக்குமார், 'ஜெயலலிதா வழி' என்று சொன்னால் லஞ்ச வழி என்றுதான் தெரிகிறது, நான் சொல்கிறேன் ’ஜெயலலிதா வழி’ என்பது 60 கோடிக்கு குறையாமல் கொள்ளை அடித்தது. உங்கள் அரசின் நடவடிக்கையை நான் எதிர்க்கத் தயார். வழக்கைப் போடுங்கள். தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நான் வாழ்பவன், உங்கள் வழக்கை கணினி மூலம் தொடங்கலாம். நீங்கள் ஜெயலலிதா வழியை விடும் வரை நான் விடப்போவதில்லை...எனக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் தெரிந்த ஜெயலலிதா வழி 60 கோடி கொள்ளை? என தெரிவித்திருக்கிறார்.
கமல்ஹாசனை தொடர்ந்து அவர் அண்ணன் சாருஹாசன் ஜெயலலிதாவை ஊழல் பேர்வழி என்று நேரிடையாக விமரிசித்து இருப்பது அதிமுக மத்தியில் பரபரப்பை கூட்டியுள்ளது.