பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் Prabakaran D அனுப்பிய மனுவிற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுப்பதாகப் பதில் அனுப்பியுள்ளது. ஆனால் தமிழக அரசு அரை மனதுடன் சில வேலைகளைச் செய்கின்றது.
அரைகுறையான மேற்பூச்சு வேலைகள் பிளாஸ்டிக் ஒழிப்பில் பயன் அழிக்காது. சுமைக் கைப்பைகளை பொருத்த வரை பருத்திக் கைப்பைகள் மிகவும் ஏற்றவை. பல முறை பயன்படுத்தக் கூடியவை .
கோவை, திருப்பூர், ஈரோடு விசைத் தறிக் கூடங்களில் பருத்தித்துணிகள் பல்லாயிரக் கணக்கான மீட்டர்கள் தினசரி உற்பத்தி செய்யப்படுகின்ற சூழ்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச் சூழலை நாசம் செய்வது சரியல்ல.
சாப்பாட்டு தட்டு போன்றவற்றிற்கு பாக்குத் தட்டு போன்ற மாற்றுப் பொருட்கள் உருவாகவில்லையா? தேங்காய் ஓடு போன்றவையும் மாற்றுப் பொருட்களாக பயன்படுத்தக் கூடியவவை. இவை சார்ந்த தொழில்களில் பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
விசைத்தறி தொழில் பலருக்கு வேலை வாய்ப்பினைக் கொடுக்கின்றது. அரசு முற்றிலும் 'பிளாஸ்டிக் கேரி பேக்'களை தடை செய்தால் விசைத் தறித் தொழிலும் சிறப்படையும்.
பிளாஸ்டிக் பெட் பாட்டில்களுக்கு பதில் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்தலாம். கண்ணாடி மறு சுழற்சி செய்யக் கூடியது.
கண்ணாடி உற்பத்தி தொழில் நுட்பத்தினை தமிழகத்தில் கொண்டு வந்து புதிய தொழிற்சாலைகளை உருவாக்கலாம்.மக்கள் வெட்டி அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு இந்த மாதிரி நமது வாழ்க்கையை மேலும் அழகுறச் செய்யும், நீடித்திருக்கக் கூடிய தொழில் முறைகளில் கவனம் செலுத்தினால் வருங்காலத் தலைமுறை நம்மை வாழ்த்தும்.
அரசும், கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் தலைவர்களும் அவர்கள் சமுதாயத்திற்கு ஒரு சிறிய உதவியையாவது செய்ய வேண்டும் என்று கருதினால் இந்த விசயங்களில் முதலில் முடிவு எடுக்கட்டும்.