நங்கநல்லூர் பிரதான சாலையில் நங்கநல்லூர் கூட்டுறவு சங்கம் உள்ளது. கூட்டுறவுத் துறையின் சார்பில் நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் இதே நங்கநல்லூர் கூட்டுறவு பண்டகச் சாலையில் 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா 25-05-2014 அன்று திறந்து வைத்தார்.
சங்கத்தின் மூலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்ட கடன் வழங்கப்பட்டு வருகிறது. வணிக வளாகத்துடன் கூடிய இக்கட்டிடத்தின் முதல் மாடியில், தாசில்தார் அலுவலகம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகமும், தரை தளத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம், டீக்கடை, ஜெராக்ஸ் கடை உள்பட 10க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. இதில், தாசில்தார் அலுவலகம் மட்டும் கடந்த 8 மாதங்களுக்கு முன் ஆலந்தூருக்கு மாற்றப்பட்டது. கட்டிடத்தை காலி செய்து விட்டு சென்ற தாசில்தார் அலுவலகம் வாடகை பாக்கி தொகை ரூ.24 லட்சத்தினை செலுத்தாமல் சென்றுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்தார் ரூ.6 லட்சம் பாக்கி வைத்துள்ளனர்.
மேலும் 5 கடைக்காரர்கள் ரூ.2.5 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளனர். இதனால் கூட்டுறவு கட்டிட சங்கத்தினர் சங்கத்தினை நடத்த முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர்.
மேலும் சங்கத்தின் மூலம் வீடு கட்ட கடன் வாங்கியவர்களும் கடனை திருப்பி செலுத்தாததால், சங்கத்தில் வேலைபார்க்கும் ஊழியர்கள் 5 பேருக்கு கடந்த 30 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஊழியர்கள் குடும்பம் வருவாய் இன்றி தவிக்கும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க பதிவுத்துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு அரசு அலுவலகங்கள், வியாபார கடையினர் வைத்துள்ள நிலுவை தொகையினை வசூல் செய்து, சங்க ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.