பொதுவிடங்களில் மது அருந்துவதை கட்டுப்படுத்துவது மற்றும் பெண்களை கேலி செய்வதை தடுப்பது போன்றவற்றிற்காக கடந்த மாதம் முதல்முறையாக இந்த ஆளில்லா விமானத்தை தெலங்கானா காவல்துறை பயன்படுத்தியது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இந்த ஆளில்லா விமானத்தால் எடுக்கப்பட்ட காணொளி பதிவை பயன்படுத்தி, பொதுவிடத்தில் மது அருந்தியதற்காக 260 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
ஆனால், இப்போது, திறந்தவெளியில் மலம் கழிப்போரை கண்டறிய அணை ஒன்றை சுற்றி திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு, ஆளில்லா விமானத்தை (ட்ரோனை) பயன்படுத்தி கண்காணிக்கும் பணியை தெலங்கானாவின் கரீம் நகர் மாவட்ட காவல்துறை துவங்கியுள்ளது.ஆனால், திறந்தவெளியில் மலம் கழித்ததற்காக யார் மீதும் வழக்குப்பதியப்படவில்லை.
தெலங்கானா மாநிலத்திலுள்ள கரீம் நகர், வராங்கல், சித்தீப்பேட் மற்றும் சீர்சில்ல மாவட்டங்களுக்கு மனாயிர் கீழணை குடிநீர் வழங்கிவருகிறது. இந்த அணைக்கு அருகிலுள்ள இரு பூங்காக்கள் மற்றும் அணைக்கட்டுகள் பாதசாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.
இந்த திட்டத்திற்கு காவல்துறையினரோடு கைகோர்த்து செயல்படுவதாக கரீம் நகரவாசியும், ஏரி பாதசாரிகள் கூட்டமைப்பின் உறுப்பினருமான திரு.நாகராஜ் கூறியுள்ளார்.
"இது அவர்களை வெட்கப்படுத்த அல்ல. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் ஆபத்துக்களை விளக்குவதற்குதான் இந்த முயற்சி. நாங்கள் அவர்களுக்கு முதலில் மாலை அணிவிக்கிறோம். பின்னர், இந்த அணை தண்ணீரைதான் நாம் குடிநீராக பயன்படுத்துகிறோம் என்பதை விளக்குகின்றோம்" என்கிறார் நாகராஜ்.
திறந்தவெளியில் மலம் கழிப்போருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அறிவுரை கூறுவது ஒரு நேர்மறை நடத்தை மாற்றத்தை உருவாக்கி இருப்பதாக நாகராஜ் தெரிவிக்கிறார்.
பெரும்பாலான நகரவாசிகளும் தனிப்பட்ட கழிவறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, கட்டியிருப்பதாக கரீம் நகர் நகராட்சி ஆணையர் கே. ஷாஷாங் தெரிவிக்கிறார்.
"கழிவறைகள் பற்றாக்குறை என்பதல்ல. நடத்தை மாற்றம்தான் தேவைப்படுகிறது. திறந்தவெளியில் மலம் கழிப்பதை நிறுத்தாவிட்டால், நாங்கள் அபராதங்கள் விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்று ஷாஷாங் தெரிவிக்கிறார்.
இருப்பினும், தங்களுடைய இயற்கை அழைப்புக்களை திறந்தவெளியில் நிறைவேற்றி கொள்வோரை இனம்காண ஆளில்லா விமானத்தை பயன்படுத்துவது அந்தரங்க உரிமை பிரச்சனை தொடர்பான விவாதங்களை எழுப்பியுள்ளது.
மனித உரிமை ஆர்வலரான வி. சுதாகர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில். "திறந்தவெளியில் மலம் கழிப்பது தொடர்பாக, இந்த மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்க ஏன் வருகிறார்கள் என்று அதிகாரிகள் முழுமையாக புலனாய்வு செய்ய வேண்டும்.
இந்த அதிகாரிகள் முதலில் சமூக கழிவறை ஒன்றை கட்டிய பின்னர் அறிவுரை அமர்வுகளை நடத்தலாம்" என்று கூறியுள்ளார்.