அக்ஷயா சண்முகம் என்ற 29 வயது சென்னை பெண், பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கையின் 30 வயதிற்கு உட்பட்ட 30 இளம் கண்டுபிடிப்பாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

Special Correspondent

சென்னை அண்ணா பல்கலையில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றுள்ள அக்ஷயா, 2009 ம் ஆண்டு அமெரிக்காவின் மாஸ்சாசூட்டஸ் பல்கலையில் சேர்ந்து பட்ட மேற்படிப்பும், ஆராய்ச்சி படிப்பும் படித்து வருகிறார்.

தொழில் முதல் விளையாட்டு வரை சுமார் 20 பிரிவுகளைச் சேர்ந்த 600 பேர் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் 30 வயதிற்கு உட்பட்ட 30 பேர் கொண்ட பட்டியலில் அக்ஷயாவும் இடம்பெற்றுள்ளார்.

புகைப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான சாப்ட்வேரை உருவாக்கியதற்காக தான் அக்ஷயாவிற்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்வாட்ச் வடிவில் இந்த சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்பிடிப்பவர்கள் தங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போது புகைபிடிக்கக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் தருகிறது.

இதன் மூலம் புகை பழக்கத்திற்கு அடிமையானர்கள் தங்களுக்கு ஏன், எப்போது, எந்த விதமான சூழலில் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் என கூறும் அக்ஷயா, தனது இந்த கண்டுபிடிப்பை 2018 ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் சந்தைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.