மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Special Correspondent

ராமேஸ்வரத்தில் நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். கச்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பிச்சை மற்றும் ஜான்சன் என்ற இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய கடலோர காவல் படையே இவ்வாறு செய்தது ஏற்புடையது அல்ல என்று மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நேற்று மீனவர்கள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இன்று நடைபெறும் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் நாளை ராமேஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக மீனவர் சங்கம் அறிவித்துள்ளனர்.

கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் தாக்குதல் செய்ய மாட்டர்கள் என்று மத்திய அரசு உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு தரப்பில் இதுவரையில் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படாத நிலையில் மீனவர்கள் போராட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.