பரம்பரையாக ஏற்படும் விழித்திரை நோய் காரணமாக பார்வையை இழந்தவர்களுக்கு, மீண்டும் பார்வை கிடைக்க புதிய மரபணு சிகிச்சை உதவியுள்ளது.

Special Correspondent

அமெரிக்காவின் ஐயோவா பல்கலை மேற்கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் எனத் தெரிகிறது.

பரம்பரை வழியில் ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோய் எல்.சி.ஏ. எனப்படும் ‘லெபர் கன்ஜெனிடல் அமோரோசிஸ்’ என்ற பார்வை குறைபாடு 80 ஆயிரம் பேரில் ஒருவருக்கு ஏற்படுகிறது.

குழந்தை பருவத்தில் ஏற்பட்டு, பின்பு படிப்படியாக முழுப் பார்வையும் இழப்பு ஏற்படும். இவர்களுக்கு மரபணு சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை கிடைக்க செய்யும் ஆய்வை அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

பாதிப்பை ஏற்படுத்தாத வைரஸ் ஒன்றை, ஆரோக்கியமான மரபணுக்களை விழித்திரைக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் மாற்றியமைத்தனர்.

எல்சிஏ நோயாளிகளின் விழித்திரையில் ஆரோக்கியமான மரபணுக்களை எடுத்துச் செல்லும் லட்சக்கணக்கான வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர். எல்சிஏ பாதிப்புக்கு உள்ளான மொத்தம் 29 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 27 பேரால் உருவங்களையும், ஒளியையும் பார்க்க முடிந்தது. இயல்பான பார்வை கிடைக்கவில்லை என்றாலும், கம்பு மற்றும் நாய் உதவியின்றி அவர்களால் நடமாட முடிந்தது.

இந்த சிகிச்சை எவ்வளவு நாள் பலன் அளிக்கும் என தெரியவில்லை. ஆனால், இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலானோருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பார்வை நீடிக்கிறது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் 200க்கும் மேற்பட்ட எல்சிஏ நோயாளிகள் இந்த சிகிச்சை ஆய்வில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த மரபணு சிகிச்சை முறைக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்டிஏ) இன்னும் அனுமதி வழங்கவில்லை.

அதே நேரம், இந்த சிகிச்சையை எப்டிஏ.வின் ஆலோசனை குழு கடந்த அக்டோபரில் ஒருமனதாக அங்கீகரித்துள்ளது. அதனால், இந்த சிகிச்சைக்கு அனுமதி வழங்கும் முடிவு வரும் ஜனவரியில் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.