அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஜப்பான் மற்றும் தென்கொரியா சென்ற ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, தென் கொரியா அதிபர் மூன்ஜேஇன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை தொடர்ந்து, சீன தலைநகர் பீஜிங் சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்க்கு, போர்பிட்டன் சிட்டி என்று அழைக்கப்படுகிற பீஜிங்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனை வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சீன பாராளுமன்ற அரங்கில் ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அமெரிக்கா-சீனா ஆகிய இரு நாடுகளின் நிறுவனங்கள் இடையே சுமார் 16 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் கம்ப்யூட்டர்களுக்கான சிப் செட்டுகள், 300 ஜெட் விமானங்கள், கார் உதிரி பாகம் இறக்குமதி, சோயாபீன்ஸ் ஆகியவற்றை அமெரிக்காவில் இருந்து சீனா இறக்குமதி செய்வதும் அடங்கும்.
மேலும் முன்பு அமெரிக்காவினால் நிராகரிக்கப்பட்ட பிரை என்னும் பெல்ட் மற்றும் சாலை முன் முயற்சி திட்டமும் தற்போது அனுமதிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சீன நாடாளுமன்றத்தில் பேசிய டிரம்ப், எனக்கு அளித்த உற்சாகமான வரவேற்புக்கு நன்றி என்றும், பல ஆண்டுகளாக நட்பை எதிர்நோக்கி உள்ளேன் என்றும் கூறியுள்ளார். நாம் இணைந்து செயல்படுகிறபோது நமது பிரச்சினைகளை மட்டுமல்ல, உலக பிரச்சினைகளையும், மாபெரும் ஆபத்து பிரச்சினைகளையும், பாதுகாப்பு பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
டிரம்பின் சுற்றுப்பயணத்தின் நோக்கம் வர்த்தகம் என்று சொல்லப்பட்டாலும், தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வருகிற வடகொரியாவை எப்படி தடுத்து நிறுத்துவது என்று ஆசிய தலைவர்களுடன் ஆலோசிப்பதும், வடகொரியாவுக்கு எதிராக அவர்களை ஒன்று திரட்டுவதும்தான் டிரம்பின் உண்மையான நோக்கமாக உள்ளதாக சர்வேதேச வல்லுநர்கள் சொல்கிறார்கள்.