ஜிஎஸ்டி வரிவிகிதம் அமலாவதற்கு முன்பு குறு, சிறு தொழில் நிறுவனங்கள் 28 சதவீதத்துக்கும் குறைவான வரியைச் செலுத்தி வந்தன.

Special Correspondent

ஆனால் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு பெரும்பாலான குறு, சிறு தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில், அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்ற 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றனர். இதில் தமிழக அரசின் கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டிருந்தன.

இந்த கூட்டத்தில் ஜவுளிகளின் மீதான வரி 18%ல் இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குஜராத் மாநிலத்தின் கோரிக்கையை ஏற்று ஜவுளி மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 177 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆடம்பர மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பொருட்கள் உட்பட 50 பொருட்களை மட்டுமே 28% ஜிஎஸ்டி வரியில் வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஷேவிங் க்ரீம், ஷாம்பு, சோப்பு, டியோட்ரண்ட், உள்ளிட்ட அழகு சாதன பொருட்கள், சீவிங்கம், சோப்புப் பவுடர், மார்பிள், கிரானைட், சாக்லேட் மீதான 28% வரி 18% ஆகக் குறைக்கப்படுகிறது.

சிகரெட் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் 28 சதவீத வரியில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பெயிண்ட், சிமெண்ட், துணி துவைக்கும் இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி போன்றவை தொடர்ந்து 28% வரியிலேயே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.