உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை கடந்த 25-ந்தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர். அங்கு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Special Correspondent

இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி நெய்வேலியில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வேல்முருகன் மீது நெய்வேலி தெர்மல் நகர் போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதையடுத்து இன்று காலை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வேல்முருகன் திடீரென புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது தேச துரோக வழக்கை கண்டித்து மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி இருப்பதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்காக சென்றபோது என்னை கைது செய்தனர். என் மீதான கைது நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன்.

நேற்று இரவு நெய்வேலி போலீசார் தேசதுரோக வழக்கில் என்னை கைது செய்திருப்பதாக கூறினார்கள். அது முதல் நான் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளேன். உணவு, மருந்து, டிரிப்ஸ் எடுக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளின் அழுத்தத்தின் காரணமாகவே டீனை கட்டாயப்படுத்தி அவசர சிகிச்சை பிரிவில் இருந்த என்னை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள்.

பல்வேறு தமிழ் அமைப்பினர் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், துப்பாக்கி சூட்டை கண்டித்தும் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதுபோல், துப்பாக்கி சூட்டில் பலியான என் உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.

தூத்துக்குடியில் உயர் பொறுப்பில் உள்ள போலீஸ் அதிகாரிகள் வட மாநிலத்தவர் என்பதால் தமிழர்களை குறி வைத்து தாக்குகிறார்கள். நான் ஒரு பச்சை தமிழன். தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால் என் மீது கைது நடவடிக்கை தொடர்கிறார்கள். நான் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன். தொடர்ந்து தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் குரல் கொடுப்பேன். மத்திய-மாநில அரசின் அடுக்குமுறைக்கு அஞ்ச மாட்டேன்.

தூத்துக்குடியில் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி கூறி உள்ளார். அவர்தான் தனது படங்களில் மது குடிப்பது மற்றும் புகை பிடிப்பது போன்று காட்சிகள் அமைத்து இளைய தலைமுறை தம்பி, தங்கைகளை தவறான பாதைக்கு அழைத்து சென்று உள்ளார். அறவழியில் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறிய ரஜினியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.