இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 4 மக்களவை மற்றும் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Special Correspondent

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜக, இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால், இடைத் தேர்தலில் மக்களவைத் தொகுதியை பறிகொடுத்துவிட்டது.

உத்தரப் பிரதேசத்தின் கைரானா மக்களவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் வேட்பாளர் தபஸ்சும் ஹசன் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் மரிகங்காவை வீழ்த்தி தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் பால்கர், பாந்தரா கோந்தியா மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த இடைத் தேர்தலில், பால்கர் தொகுதியை கைப்பற்றிய பாஜக, பாந்தரா கோந்தியா தொகுதியை இழந்தது.

மகாராஷ்டிரத்தின் பால்கர் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் ராஜேந்திர காவித் 29,572 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 4 மக்களவைக்கு நடந்த இடைத் தேர்தலில் இந்த ஒரே ஒரு தொகுதியை மட்டுமே பாஜக கைப்பற்றியுள்ளது.இதில் இந்த பால்கர் தொகுதியில் வாக்கு பதிவு இயந்திர முறைகேடு எழுந்தது குறிப்பிடதக்கது.

பிகார் மாநிலம் ஜோகிஹாட் தொகுதிக்கு நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பாக போட்டியிட்ட ஷாநவாஸ் அலாம் 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தோல்வி ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் செங்கனூர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சஜி செரியன் வெற்றி பெற்றுள்ளார். இவர் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், காங்கிரஸ் வேட்பாளர் முனிராஜூ கெளடா 46,593 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயாவின் அம்படி தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இங்கு, காங்கிரஸ் தரப்பில் போட்டியிட்ட மேகாலயாவின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவின் மகள் மியானி டி ஷிரா வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சி மேகாலயா சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக மாற உதவியுள்ளார்.

உத்தரகாண்டின் தராலி சட்டப்பேரவைக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளருக்கும், காங்கிரஸ் வேட்பாளருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்ததால், மிகக் குறைந்த வாக்கு எண்ணிக்கையிலேயே பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வாக்கு வித்தியாசத்தை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

ஆக பதினொரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் இந்த ஒரே ஒரு தொகுதியை மட்டுமே பாஜக கைப்பற்றியுள்ளது இது பாஜவுக்கு பெரும் பினண்டவு என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.