ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Special Correspondent

இன்று தொடங்கிய வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நாளையும் தொடரும் என்பதால் பணப்பரிமாற்றப் பணிகள் அதிகமாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த 5-ஆம் தேதி இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், ஊழியர் சங்கத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன் தொடர்ச்சியாகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வங்கி அலுவலர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு அளிப்பதாக இந்திய வங்கிகள் சங்கம் முன்வைத்த பரிந்துரையை வங்கி ஊழியர் சங்கம் ஏற்கவில்லை. இதற்கு முன், கடந்த நவம்பர் 2012-ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரையிலான காலக்கட்டத்தில் 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதாகத் தெரிவித்த ஊழியர் சங்கத்தினர், பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, முத்ரா கடனுதவி திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக வங்கி ஊழியர்கள் ஓய்வின்றி பணியாற்றியதாகக் கூறினர்.

மேலும், கடந்த 3 ஆண்டுகளில் வங்கி ஊழியர்களின் பணிச்சுமை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும், தற்போது ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் அளித்திருக்கும் பரிந்துரை போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதைக் கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக 9 வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்தன. அதன்படி, இன்றும், நாளையும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏறத்தாழ 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இதில் பங்கெடுத்துள்ளதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன. வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பணப்பரிவர்த்தனைகளிலும், ஏடிஎம் சேவைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.