தூத்துக்குடியில், 99 நாட்கள் நடைபெற்ற மக்களின் போராட்டத்தை வேடிக்கை பார்த்த அதிமுக அரசு 100 வது நாளில் 13 உயிர்களை சுட்டுக்கொல்லும் முன்பே, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பை வெளியிட்டிருந்தால், அதிமுக அரசுக்கு ஆலையை மூட வேண்டும் என்ற நல்லெண்ணம் இருக்கிறது என்று சொல்லபடும் வேளையில் ஸ்டெர்லைட் செய்துள்ள வலுவான ஐந்துசட்ட விதிமீறல்கள் என்ன என்ன என்ற விவரம் வருமாறு :
முதலாவது விதிமீறல் "900 டன் உற்பத்தியிலிருந்து, 1200 டன் தின உற்பத்தி திறன் அளவுக்கு 2007 ஆம் ஆண்டு இந்த ஆலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த விரிவாக்கம் செய்யும் போது தங்களிடம் 172 ஹெக்டேர் நிலம் இருப்பதாக ஸ்டெர்லைட் சொல்கிறது.
இந்த நிலத்தில் தங்களால் தேவையான அளவுக்கு மரங்களை நட முடியும் (Green Belt area), திடக்கழிவு மேலாண்மை செய்ய முடியும் என்கிறது நிறுவனம். ஆனால், அந்த நிறுவனத்திடம் அப்போதும் 172 ஹெக்டேர் நிலம் இல்லை. இப்போதும் அவ்வளவு நிலம் இல்லை. அதாவது பொய் சொல்லி அந்த அனுமதியை வாங்கி இருக்கிறார்கள்" என்கிறார்.
"இரண்டாவது விதிமீறல் புகை போக்கி. நிறுவனம் வளர வளர புகை போக்கியும் வளர வேண்டும். அந்த நிறுவனம் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது ஆண்டுக்கு 40,000 டன் என்பது அதன் உற்பத்தி திறன். அப்போது அதன் புகை போக்கியின் உயரம் 60 மீட்டர். இப்போது அதன் உற்பத்தி திறன் 4 லட்சம் டன். ஆனால், இப்போதும் அதன் புகை போக்கியின் உயரம் அதே 60 மீட்டர்தான் புகை குழாய்".
மூன்றாவது விதிமீறல் "மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, அபாயகரமான தொழிற்சாலைகள் இருந்தால், அதனை சுற்றி அரை கிலோமீட்டரிலிருந்து, ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு பசுமை பகுதி இருக்க வேண்டும். ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு அதிலிருந்து விதிவிலக்கு. இதன் பசுமைபகுதி 25 மீட்டர் சுற்றுக்கு இருந்தால் போதும். ஆனால், அந்த 25 மீட்டருக்கு கூட அவர்கள் பசுமை பகுதியை அமைக்கவில்லை இல்லை. சுலபமாக புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், வெவ்வேறு மரங்களை, வெவ்வேறு உயரங்களில் வளர்க்க வேண்டும். தொழிற்சாலை உமிழும் மாசை குறைக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். ஆனால், இதையும் அவர்கள் செய்யவில்லை".
நான்காவது விதிமீறல் - சுகாதார ஆய்வு."மீண்டும் ஸ்டெர்லைட் இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தபோது, இந்த தொழிற்சாலை ஆறு மாதத்திற்கு ஒரு முறை சுகாதார கண்காணிப்பு ஆய்வு செய்ய வேண்டும் என்றது. ஆனால், இப்போது வரை இதனை செய்யவில்லை. மருத்துவ முகாம் மட்டுமே நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சுகாதார ஆய்வு செய்தால் தங்களுக்கு எதிரான தகவல்கள் வரும் என்பதற்காக இதனை செய்யவில்லை"என்கிறார் நித்தியானந்த்.
"நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் படி, அபாயகரமான தொழிற்சாலைகள் அவ்வாறான தொழிற்சாலைகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும்தான் அமைக்க வேண்டும். ஆனால், இந்த ஸ்டெர்லைட் ஆலை இருக்கும் இடம் மக்கள் பகுதியில்" என்கிறார்.
இந்த விதிமீறல்களை சொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருந்தால் நீதிமன்றத்திலும் அவர்களை சுலபமாக எதிர்கொண்டிருக்க முடியும் என்கிறார் தாமிர உருக்காலையை மூட வேண்டும் என்று சொல்லும் நித்தியானந்த்.