திருவள்ளூர் நகரின் மைய பகுதியாக விளங்கும் ஆயில்மில் பகுதியில், ஜே.என்.சாலையில் ‘பாங்க் ஆப் இந்தியா வங்கி’ இயங்கி வருகிறது.

Special Correspondent

2 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் வங்கி செயல்படுகிறது. கட்டிடத்தின் தரை தளத்தில் சூப்பர்மார்க்கெட்டும், 2-வது மாடியில் சொத்துக்கடன் வழங்கும் தனியார் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. தரை தளத்தின் ஒரு பகுதியில் இந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கு காவலாளியும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த வங்கியில் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்களில் பலர் தங்களது நகைகளை அடமானம் வைத்து, அதன்பேரில் பணம் பெற்று உள்ளனர்.இந்த வங்கியின் மேலாளராக சென்னையைச் சேர்ந்த சேகர் என்பவரும், உதவி மேலாளராக பானு என்பவரும் பணிபுரிகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து வங்கி ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். சனி, ஞாயிறு 2 நாள் விடுமுறை முடிந்து நேற்று காலை வழக்கம்போல் 10 மணியளவில் வங்கி ஊழியர்கள் வங்கிக்கு வந்தனர். வங்கி பூட்டை திறந்து உள்ளே சென்ற அவர்கள், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் வைக்கப்பட்டு இருந்த லாக்கர்கள் அறையின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த அறைக்குள் சென்று பார்த்தபோது, லாக்கர் கதவுகளும் திறந்து கிடந்தன. அதை சோதனை செய்தபோது, வங்கி வாடிக்கையாளர்கள் 624 பேர் அடமானம் வைத்து இருந்த சுமார் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடி என்று கூறப்படுகிறது.

மற்றொரு நகை பாதுகாப்பு அறையில் உள்ள லாக்கர்களில், பாதுகாப்பு கருதி வாடிக்கையாளர்கள் வைத்து இருந்த நகைகள் எதுவும் திருட்டு போகவில்லை. மேலும் அந்த வங்கியில் இருந்த ரூ.25 லட்சமும் அப்படியே இருந்தது.மர்மநபர்கள், வங்கியின் பூட்டை உடைக்காமல் கள்ளச்சாவி போட்டு திறந்து உள்ளே புகுந்து உள்ளனர். பின்னர் நகைகள் இருந்த அறைகள் மற்றும் அதில் உள்ள லாக்கர்களையும் கள்ளச்சாவி போட்டு திறந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் டி.ஐ.ஜி. தேன்மொழி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வங்கி ஊழியர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.சம்பவ இடத்துக்கு பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல மேலாளர் ஜெயப்பிரகாஷ் வந்தார். அவரும் வங்கி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

வங்கி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்கள் 8 பேரிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், கொள்ளை நடைபெற்று 12 மணி நேரத்தில் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்புள்ள 32 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.வங்கி ஊழியர் விஸ்வநாதன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.