கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், ஹெச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 117 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானத்தை குமாரசாமி முன்மொழிந்தார். அப்போது, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், 117 எம்எல்ஏக்கள் குமாரசாமிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கர்நாடக முதல்வராக குமாரசாமி புதன்கிழமை மாலை பதவியேற்றார். துணை முதல்வராக காங்கிரஸ் மாநில தலைவர் ஜி. பரமேஸ்வர் பதவியேற்றார்.
சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாள் அவகாசம் அளித்திருந்தார். எனினும், தனக்கு 15 நாள் அவகாசம் தேவையில்லை; கூடிய விரைவில் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவேன் என்று குமாரசாமி குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய அரசு மீது 25ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை பகல் 12.15 மணிக்கு கூடியது.
இக்கூட்டத்தில், முதலாவதாக பேரவைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. அதில், கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராக மஜத - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை பிற்பகலில் முதல்வர் குமாரசாமி முன்மொழிந்தார். பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 117 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதையடுத்து, குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்கும்படி, தங்கள் கட்சி எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசலாம் என்று மஜதவும், காங்கிரஸும் சந்தேகித்தன. இதனால், அந்த 2 கட்சிகளும், தங்கள் கட்சி எம்எல்ஏக்களை ஹோட்டல்களில் கடந்த 9 நாள்களாக பாதுகாப்பாக தங்க வைத்திருந்தனர்.
தும்லூரில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களும், பெங்களூரில் உள்ள பிரபல ஹோட்டலில் மஜத எம்எல்ஏக்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். எம்எல்ஏக்களை சந்தித்துப் பேசுவதற்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாருக்கும் அனுமதியளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு மட்டுமே மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்கு 112 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது. எனினும், குமாரசாமிக்கு ஆதரவாக 117 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளனர்.
பலமுனையில் முயன்றும் கட்சி மஜத - காங்கிரஸ் கூட்டணி பிளவை எற்படுத்தும் விஷ்யத்தில் தோற்றதால் பாஜக கட்சியினர் வருத்தம் அடைந்து உள்ளதாக செய்திகள் வருகின்றன...