இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் முக்கியமான சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட்ம் 1986ல் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் :
மேலும் 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கை; 2010 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டம் காரணமாகவே பெரிய தொழிற்சாலை ஒன்றைத் தொடங்குவதற்கு முன்பு அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எவை என்பதைப்பற்றிய அறிக்கையைத் (Environment Impact Assessment Report ) தாக்கல் செய்யவேண்டும், மக்களின் கருத்தறியும் கூட்டத்தை (Public Hearing ) நடத்த வேண்டும் என்பவை கட்டாயமாக்கப்பட்டன.
மேற்சொன்ன சட்டங்கள் மூலம் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் எந்தவொரு நிறுவனமும் தொழிற்சாலையை ஆரம்பிக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு மத்திய அரசின் நிலைபாட்டில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது.
அதன் காரணமாக மோடி அரசு பதவியேற்று முதல் ஆறு மாதங்களிலேயே 650 தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தங்களது ஆட்சியின் சாதனை என அன்றைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பெருமைய்டன் சொன்னார்.
மோடி அரசு பதவியேற்றதும் சுற்றுச்சூழல் சட்டங்களில் மாற்றம் செய்வதற்காக டிஎஸ்.ஆர்.சுப்ரமணியம் என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தியாவிலுள்ள ஆறு சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களிலும் திருத்தங்கள் செய்யப்பட்டன. அத்தகைய திருத்தங்கள் செய்யப்படுவதற்கு முன்பே 2014 டிசம்பர் மாதத்தில் பா.ஜ.க. அரசு சுற்றுச்சூழல் சட்டத்துக்குப் புதிய விளக்கம் ஒன்றை அளித்தது. அதன் காரணமாகவே ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டத்தை நடத்தாமலேயே தொழிற்சாலைகளைத் துவங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றன.
2006 ஆம் ஆண்டைய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிவிக்கையின் ( EIA) பத்தி 7(i) III. Stage (3) (i) (b)க்கு மன்மோகன் சிங் அரசு விளக்கமொன்றை அளித்திருந்தது. தொழில் பூங்கா ஒன்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டிருந்தால், அந்தப் பூங்காவுக்குள் துவக்கப்படும் தொழிற்சாலைகளுக்குத் தனியே சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்று O.M.No.J- 11013/36/2014-IA-1 dated 16th May 2014 தேதியிட்ட அந்த விளக்கத்தில் அது கூறியிருந்தது. அதாவது, தொழிற் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படாவிட்டால், அதற்குள் துவக்கப்படும் தொழிற்சாலைகள் அத்தகைய அனுமதி பெறாமல் ஆரம்பிக்கப்படக் கூடாது என்பதே அதன் பொருள்.
பாஜக அரசு பதவியேற்றதும் அந்த விளக்கத்தைத் திரித்து புதிய விளக்கமொன்றைக் கொடுத்தது. “14.09.2006க்கு முன்பு அறிவிக்கை செய்யப்பட்ட தொழிற்பேட்டை / தொழிற் பூங்கா ஆகியவற்றில் துவக்கப்படும் எந்தவொரு தொழிற்சாலைக்கும் புதிதாக சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என அந்த விளக்கத்தில் பாஜக அரசு கூறியது (O.M.No.J-11013/36/2014-IA-I dated 10th December 2014 ) இதன்மூலம் அந்தத் தொழிற்பேட்டை / தொழிற்பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி இருக்கிறதா என்பது முக்கியமில்லை என பாஜக அரசு ஆக்கியது. அந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது கட்டுமானப் பணிகள் சட்டத்துக்கு உட்பட்டவை என வாதிட்டு வந்தது.
பா.ஜ.க. அரசு அளித்த சட்டத்துக்கு முரணான விளக்கத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2016ஆம் ஆண்டு ரத்து செய்ததோடு மக்கள் கருத்தறியும் கூட்டம் கட்டாயம் என அறிவித்துவிட்டது. ஆனால் 2016 ஆம் ஆண்டைய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்ட தமது கட்டுமானப் பணியைக் கட்டுப்படுத்தாது என ஸ்டெர்லைட் நிறுவனம் வாதிட்டது. அந்த வழக்கில்தான் இப்போது கட்டுமான பணிகளை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2013 -14ஆம் ஆண்டுகளில் கார்பரேட் நிறுவனங்களிடம் அதிக அளவு நன்கொடை பெற்றதில் முதலிடம் வகிக்கும் கட்சியாக பா.ஜ.க.வே இருக்கிறது.
அக்கட்சி 1480 பேரிடம் 363 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கொடுத்த 34 கார்பரேட் நிறுவனங்களின் பட்டியலும் அதில் அடக்கம். அந்த கார்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக 120 கோடி ரூபாயை பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக அளித்திருந்தன. அப்படி மிக அதிகளவில் நன்கொடை அளித்த கார்பரேட் நிறுவனங்களின் வரிசையில் ஸ்டெர்லைட் நிறுவனமும் அதன் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமமும் இருக்கிறது. வேதாந்தா குழுமம் 22.5 கோடி ரூபாயை பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக அளித்துள்ளது...
இதில் மவுனம் சாதிக்கும் பிரதமர் நரேந்திர மோடியோ கிரிக்கெட் வீரர் விராத் கோலியோடு உடற்பயிற்சி செய்யும் சவாலில் ஈடுபட்டிருக்கிறார்.