100 நாட்களாக அமைதியாக நடைபெற்ற போரட்டத்தை கண்டுகொள்ளாத அரசின் நடவடிக்கை பயங்கர கலவரவத்தில் முடிந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 100வது நாளை எட்டியது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்த தொடங்கினர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்தது.
மடத்தூர் கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட பொதுமக்கள் முயற்சித்தனர். இதனிடையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டத்தில் பொதுமக்கள்- காவல்துறை இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் போலீசார் தடியடி நடத்தினர்.
அதையடுத்து போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த மோதலில் காவல்துறையினரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். மேலும் தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதால், போலீசார் சுவர் ஏறிக் குதித்து ஓடினர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசப்பட்டது.
போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முடியாததால் காவல்துறையினர் திணறினர். கண்ணீர்ப்புகைக்குண்டு வீசிய வஜ்ரா வாகனத்தையும் போராட்டக்காரர்கள் விரட்டியடித்தனர், மேலும் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்தனர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இருசக்கர வாகனங்களை தீ வைத்து போராட்டக்காரரகள் கொளுத்தினர்.
இருந்தும் மக்கள் கூட்டம் கட்டுக்கு அடங்காமல் போகவே தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க போலீஸ் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
முதல் முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 2-வது மற்றும் 3-வது முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர் இருவர் ருவர் உயிரிழந்ததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அதுமட்டும் அல்லாமல் ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு தீவைக்கப்ட்டது.
4 மணி நேரத்திற்கும் மேலாக பதற்றம் நீடிக்கிறது இதனைஅனைத்து தமிழக எதிர்கட்சிகளும் கண்டிதுள்ளது.