தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மக்கள் இன்று கடையடைப்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பேரணி என அடுத்தடுத்து போராட்டங்களை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற 100-க்கணக்கானோரை மடத்தூர் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடையை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறியதால் இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு வன்முறை ஏற்பட்டது.
இந்த பேரணியின்போது போலீஸ் நடத்திய தடியடியில் பொதுமக்களில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதனால் காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த போராட்டக்களத்தில் ஏராளமாக பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதால் பதட்டம் நீடிக்கிறது.
மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்ளை கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகை குண்டு வீசினர். போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் சூழ்ந்ததால் போலீசார் ஓட்டம் பிடித்தனர். மேலும் காவல்துறையினர் மீது கார்களை வீசி போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசார் வாகனங்கள் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் நுழைந்து முற்றுகையிட்டனர். பேரணியாக வந்த ஆயிரக்கணக்கானோரை காவல்துறையால் தடுக்க முடியவில்லை.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலகம் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்களில் இருவர் உயிரிழந்தார். மேலும் பலர் மண்டை உடைந்து காயம் அடைந்துள்ளனர்.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர் இருவர் உயிரிழந்ததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். போலீசால் விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டு அலுவலகத்தில் நுழைந்து அலுவலகத்தை சூறையாடினர். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் ஆட்சியர் அலுவலகம் புகை மண்டலமானது.
போராட்ட செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போலீசார் செய்தியாளர்களை தாக்கி கேமராக்களை பறித்து அத்துமீறலில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள எஸ்.பி. அலுவலகத்துக்கு ஊழியர்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.