அருணாசல் எல்லையில் 4 லட்சம் கோடி மதிப்பில் சீனா தங்கச்சுரங்கம்

Special Correspondent

இந்தியாவின் அண்டை நாடான சீனா, தனது நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள அருணாசலபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது.

அருணாசலபிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அத்துமீறி இந்தியா மீது சீன படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வரும் நிலையிலும் அருணாசலபிரதேச எல்லையில் எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபரை சந்தித்து பேசியதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது அருணாசலபிரதேச எல்லையையொட்டி சீனா தங்கச்சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி உள்ளது.

இந்த சுரங்கத்தில் தங்கம் தவிர வெள்ளி மற்றும் பல விலைமதிப்புள்ள கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று சீன பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுரங்கம் தோண்டும் பணிக்காக அங்கு சாலை வசதிகள் உள்ளிட்ட இதர உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே இந்தியா–சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில், அருணாசலபிரதேச எல்லையையொட்டி சீனா தங்கச்சுரங்கம் தோண்டுவது பிரச்சினையை மேலும் வலுப்படுத்தி உள்ளது.

அருணாசலபிரதேச எல்லையில் இந்திய பகுதிகள் வரையில் விரியும் சுரங்கத்தில் டன் கணக்கில் தங்கம், வெள்ளி மற்றும் வேறு சில உலோகங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு இந்தியாவின் ஒப்புதல் இல்லாமல் அங்கு தங்கச் சுரங்கத்தை வெட்டித் தோண்டும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.

சுரங்கத்தை விரிவுபடுத்தும் பணிகளையும் வேகப்படுத்தி வருகிறது. சீன அரசின் சுரங்கத்துறை நேரடியாக இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. டோக்லாம் மோதல் காரணமாக இருநாடுகள் இடையிலான உறவில் மோசமான நிலை ஏற்பட்டது.

மோடியின் தீடிர் சீன விஜயம் நடத்தியும் இப்போது அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீனா அடாவடியை தொடங்கி உள்ளதால் , இந்திய - சீன உறவை மேலும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. இது பாஜக மோடி அரசுக்கு பின்னடைவாக கருத வேண்டி உள்ளது என்று சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.